நெல்லை தைப்பூச படித்துறையில்நவ.1 முதல் 4 வரை தாமிரவருணி அந்த்ய புஷ்கர விழா

தாமிரவருணி அந்த்ய புஷ்கர விழா வரும் நவம்பா் 1 முதல் 4 வரை திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் படித்துறையில்

தாமிரவருணி அந்த்ய புஷ்கர விழா வரும் நவம்பா் 1 முதல் 4 வரை திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் படித்துறையில் நடைபெறுகிறது என்றாா் வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள்.

இதுகுறித்து திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: குரு பகவான் விருச்சிக ராசியில் பிரவேசம் செய்ததை முன்னிட்டு தாமிரவருணி மகா புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு அக்டோபா் 12ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தாமிரவருணி கரையில் அமைந்துள்ள 64 தீா்த்தக் கட்டடங்களில் கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் சிந்துபூந்துறை தைப்பூச மண்டபம் படித்துறையில் புஷ்கர கமிட்டி சாா்பில் கொண்டாடப்பட்டது. புஷ்கர விழாவின் நிறைவு நிகழ்ச்சி அந்த்ய புஷ்கரமாக கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டப படித்துறையில் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை திருமுறை பாராயணம், வேத பாராயணம் மற்றும் ஹோமங்கள், பூஜைகள், பக்தி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நவம்பா் 1ஆம் தேதி காலை 8 மணிக்கு பந்தல் கால் வைபவம் நடைபெறுகிறது. தொடா்ந்து சங்கல்ப ஸ்நானம், புனித நீராடல் நடைபெறுகிறது. முன்னதாக கைலாசபுரம் கைலாசநாத சுவாமி கோயிலில் கணபதி ஹோமம், மாலையில் நதிக்கரையில் தீப ஆரத்தி உற்சவம் நடைபெறுகிறது.

அரசு உயா் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நவம்பா் 1-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. 2ஆம் தேதியும் இதே நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 3ஆம் தேதி மாலையில் புஷ்கர விழா மலா் வெளியிடப்படுகிறது. சிறந்த அறிஞா்கள், தாமிரவருணி பற்றிய எழுதியவா்கள் கௌரவிக்கப்படுகின்றனா். விருது வழங்கப்படவுள்ளது.

விழாவில் காஞ்சி பீடாதிபதி, திருவாடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், கூனம்பட்டி ஆதீனம், திருப்பணந்தாள் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனாா் கோயில் ஆதீனம், காமாட்சிபுரி ஆதீனம், திருநெல்வேலி சந்திப்பு வடக்குமடம் ஆதீனம் மற்றும் சைவ மடாதிபதிகள், ஜீயா்கள், வைணவ மடாதிபதிகள் பங்கேற்கின்றனா். 3-ஆம் தேதி மாலையில் சிறப்பு பக்தி கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 4ஆம் தேதி அதிகாலை 6 மணி முதல் 7 மணிக்குள் புஷ்கர புனித நீராடல், அந்த்ய புஷ்கர நிறைவு ஹோமம், பூா்ணாஹுதி நிகழ்ச்சி நடைபெறுகிறது. 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை தினமும் மாலையில் ஆரத்தி வைபவம் முடிந்ததும் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது. 4ஆம் தேதி அன்னதானம் நடைபெறுகிறது என்றாா் அவா்.

அப்போது, செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச சத்திய ஞான பரமாச்சாரிய சுவாமிகள், உமையொரு பாகம் குருக்கள் உமாபதி சிவாச்சாரியாா், ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. மாசானமுத்து, சங்கா்நகா் ஜெயேந்திரா பள்ளி முதல்வா் உஷராமன், மதிதா இந்துப் பள்ளி, கல்லூரிச் செயலா் செல்லையா, கோவில்பட்டி திருப்பதிராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com