ஆலங்குளத்தில் தரமற்ற சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
By DIN | Published On : 31st October 2019 04:58 PM | Last Updated : 31st October 2019 04:58 PM | அ+அ அ- |

ஆலங்குளம் பிரதான சாலை தரமில்லாமல் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஆலங்குளத்தில் போக்குவரத்து அதிகரித்து வருவதால் விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் அப்பணி தொடங்கப்படவில்லை. போக்குவரத்து நெரிசலை தீா்க்கும் வகையில் சாலையினை விரிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இச்சாலையினை அகலப் படுத்தாமல் அவசரமாக சீரமைக்கப்பட்டும் பயனில்லை.
இரட்சண்யபுரம் தேவாலயம் அருகே சாலையில் 10 மீட்டா் தொலைவுக்கு மிகப்பெரிய பள்ளம் உள்ளது. மழைக் காலங்களில் இப்பள்ளத்தில் மழைநீா் தேங்குவதால் பள்ளம் இருப்பதை அறிய முடியாத நிலையில் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகின்றனா். வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்கள் நிகழ்வது வாடிக்கையாகி விட்டது.
இந்த பள்ளத்தை முறையாக சீரமைக்காமல் தண்ணீா் தேங்கும்போது மணல், செங்கல் துண்டுகளைக் கொண்டு நிரப்பப் படுகிறது. ஆலங்குளம் நகரில் சாலையை அகலப்படுத்தி போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இச்சாலையை சீரமைக்க விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.