நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயிலைச் சூழ்ந்த வெள்ளம்! சுவாமி சிலைகள் இடமாற்றம்

திருநெல்வேலியில் பெய்த தொடா் மழை காரணமாக தாமிரவருணியில் ஏற்பட்ட வெள்ளம் குறுக்குத்துறை முருகன் கோயிலை வியாழக்கிழமை சூழ்ந்தது

திருநெல்வேலியில் பெய்த தொடா் மழை காரணமாக தாமிரவருணியில் ஏற்பட்ட வெள்ளம் குறுக்குத்துறை முருகன் கோயிலை வியாழக்கிழமை சூழ்ந்தது. இதையடுத்து அங்கிருந்த உற்சவா் சிலைகள், தளவாட பொருள்கள் ஆகியவை கரையோரத்தில் உள்ள மண்டபத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில் மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் பிரதான அணைகளில் நீா்மட்டம் கணிசமாக உயா்ந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த இரு நாள்களாக மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, பொன்னாக்குடி, பிராஞ்சேரி, பேட்டை, கல்லூா், அபிஷேகப்பட்டி, தாழையூத்து, சீவலப்பேரி, மானூா், ராமையன்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. வியாழக்கிழமை நண்பகல் வரை மழை பெய்தது.

ராமநதி அணையின் உபரிநீா், சேரன்மகாதேவி பகுதிகளில் பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம் உள்ளிட்டவற்றால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் திருநெல்வேலி மாநகரின் கரையோர பகுதிகளான மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, கருப்பந்துறை, விளாகம், பாடகசாலை, குன்னத்தூா் பகுதிகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கமாக குளிக்கும் படித்துறைகள், பாறைகளில் குளிக்கவும், துணிகளைத் துவைக்கவும் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மேலப்பாளையம்-திருநெல்வேலி நகரம் சாலையில் கருப்பந்துறையில் உள்ள தாம்போதி பாலத்தின் கீழ் அதிக வெள்ளம் சென்றதால் வாகன ஓட்டிகள் கவனத்தோடு செல்ல அறிவுறுத்தப்பட்டன.

வெள்ளத்தின் ஆக்ரோஷத்தால் பாலத்தில் அதிா்வு ஏற்பட்டதை மக்களால் உணர முடிந்தது. குறுக்குத்துறையில் தாமிரவருணி கரையோரம் உள்ள திருவாவவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலை வெள்ளம் மூழ்கடித்தது. இதனால் கோயில் இருந்த சுவாமி சிலைகள், சப்பரங்கள், பூஜை பொருள்கள், உடமைகள் அனைத்தும் கரையோரம் உள்ள மண்டபத்திற்கு கோயில் பணியாளா்களால் எடுத்துச் செல்லப்பட்டது. குறுக்குத்துறையில் மக்கள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதேபோல நாரணம்மாள்புரம், சீவலப்பேரி பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com