மடைகளுக்கு ஷட்டர் அமைக்காமல்  மராமத்துப் பணிகளை முடித்த பொதுப்பணித் துறை! கண்டிகைப்பேரி விவசாயிகள் போராட முடிவு

திருநெல்வேலி அருகேயுள்ள கண்டிகைப்பேரியில் குளத்தில் மராமத்துப் பணிகளை மேற்கொண்ட
மடைகளுக்கு ஷட்டர் அமைக்காமல்  மராமத்துப் பணிகளை முடித்த பொதுப்பணித் துறை! கண்டிகைப்பேரி விவசாயிகள் போராட முடிவு

திருநெல்வேலி அருகேயுள்ள கண்டிகைப்பேரியில் குளத்தில் மராமத்துப் பணிகளை மேற்கொண்ட பொதுப்பணித் துறையினர், மடைகளில் முறையாக ஷட்டர் அமைக்காமல் சென்றதைக் கண்டித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி அருகேயுள்ள கண்டிகைப்பேரியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. கோடகன்கால்வாயின் கடைமடை பாசனப்பகுதியாக இப்பகுதி உள்ளது. 
இக்குளத்தில் நிரம்பும் தண்ணீரைக் கொண்டு சுமார் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஆக்கிரமிப்பு, பலமில்லாத கரை, அமலை மற்றும் வேலிகாத்தான் செடிகளின் ஆதிக்கத்தால் குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதி குறைந்தது. மடைகளும் சேதமடைந்ததால் குளத்தில் மராமத்துப் பணிகள் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து பொதுப்பணித் துறை சார்பில் மராமத்துப் பணிகள் செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் நடைபெற்றன. 
குளத்தின் கரையில் சிமென்ட் தளம் அமைக்கப்பட்டதோடு மடைகளும் சீரமைக்கப்பட்டன. அதன்படி சீரமைக்கப்பட்ட ஒரு மடையில் ஷட்டரை முழுமையாக அடைத்தாலும் தண்ணீர் வெளியேறும் வகையில் மிகவும் அரைகுறையாக பணிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், குளத்தின் கடைசி மடையில் ஷட்டரே இல்லாததால் தண்ணீர் முழுமையாக வெளியேறும் அபாயம் உள்ளதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர். இருப்பினும் மடை சரி செய்யப்படாததால் தண்ணீர் வீணாகி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
பெயரளவுக்கு மராமத்துப் பணி: இதுகுறித்து கண்டிகைப்பேரிகுளம் பாசன விவசாயிகள் சங்க முன்னாள் செயலர் கணபதி கூறியது: கோடகன்கால்வாய் வழியாக வரும் தாமிரவருணி தண்ணீர் மலையாளமேடுகுளம் நிரம்பிய பின், கண்டிகைப்பேரி குளத்திற்கு வந்து சேரும். இக்குளம் நிரம்பியதும் கடைசி குளமான சத்திரம் புதுக்குளத்தைச் சென்றடையும். ஆண்டுதோறும் கார் பருவத்திற்கு ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படும். 
கடந்த சில ஆண்டுகளாக குளத்தில் பராமரிப்பு போதிய அளவில் இல்லை. நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததோடு, கட்டடக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளும் கொட்டப்பட்டன. இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது பெயரளவுக்கு மட்டுமே மராமத்துப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. இக்குளத்தில் மொத்தமுள்ள 7 மடைகளில் இருமடைகளில் தண்ணீர் வெளியேறி வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் பலனில்லாமல் உள்ளது என்றார் அவர்.
சாலைமறியல் செய்ய முடிவு: இதுகுறித்து கண்டிகைப்பேரிகுளம் பாசன விவசாயிகள் சங்கச் செயலர் சண்முகராஜ் கூறியது: கண்டிகைப்பேரி குளத்தில் கிடைக்கும் பாசனநீரைக் கொண்டு 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியில் விவசாயம் நடைபெறுகிறது. 
கண்டிகைப்பேரி, பாறையடி, பழையபேட்டை, இலந்தைகுளம், நதிபுரம், கோட்டையடி, சாலியர்தெரு, கிருஷ்ணப்பேரி, கரையடிபச்சேரி, ராமையன்பட்டி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.
நிகழாண்டில் கார்பருவம் பொய்த்த நிலையில் கால்நடைகளின் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பிசான பருவத்திற்கு இப்போது நாற்றுப்பாவினால் அறுவடை மழையால் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இன்னும் 30 நாள்களுக்கு பின்பே நாற்றுப்பாவ முடியும். அப்படியிருக்கையில் மடைகளில் ஷட்டர்கள் சரியாக அமைக்கப்படாததால் குளத்திற்கு வரும் தண்ணீர் வீணாக வெளியேறி வயல்களுக்குள் பாய்ந்து வருகிறது. 
பொதுப்பணித் துறையினர் உடனடியாக ஆய்வு செய்து தண்ணீர் வீணாவதைத் தடுக்காவிட்டால், திருநெல்வேலி-தென்காசி சாலையில் அனைத்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களைத் திரட்டி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.
அதிகாரி பதில்: இதுகுறித்து பொதுப்பணித் துறையின் உதவிப் பொறியாளரிடம் கேட்டபோது, கண்டிகைப்பேரிகுளத்தின் மடைகளில் ஒரு மடை மராமத்துப் பணியில் சேராது. அதன் வழியாகவும், சீரமைக்கப்பட்ட மடையின் வழியாகவும் தண்ணீர் வீணாவதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து துரித நடவடிக்கை எடுக்கப்படும். பணியாளர்களை அனுப்பி மடைகளைச் சீரமைக்கவும், பாசன நீர் வீணாகாமல் தடுக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் அவர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com