பராமரிப்பற்ற நிலையில் பாரதியார் சிலை!

திருநெல்வேலி சந்திப்பில் மகாகவி பாரதியாரின் உருவச்சிலை பராமரிப்பற்ற நிலையில் காணப்படுவது வேதனை அளிப்பதாக
பராமரிப்பற்ற நிலையில் பாரதியார் சிலை!

திருநெல்வேலி சந்திப்பில் மகாகவி பாரதியாரின் உருவச்சிலை பராமரிப்பற்ற நிலையில் காணப்படுவது வேதனை அளிப்பதாக பாரதி அன்பர்களும் பல்வேறு அமைப்பினரும் தெரிவித்தனர்.
திருநெல்வேலி சந்திப்பில் பாரதியார் படித்த மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி அருகே மகாகவி பாரதியாரின் உருவச்சிலை உள்ளது. இந்தச் சிலை 1973-ஆம் ஆண்டு மகாகவி பாரதியாரின் நினைவு நாளில் அப்போதைய தமிழக ஆளுநர் கே.கே.ஷாவால் திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சிலைக்கு ஆண்டுதோறும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். 
வழக்கம்போல், இந்த ஆண்டும் பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாரதி அன்பர்கள், பல்வேறு அமைப்பினர் பாரதியாரின் சிலை உள்ள வளாகம் பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாரதியார் சிலை உள்ள வளாகத்தின் முன்பக்க கதவு அடைக்கப்பட்டிருந்தது. பக்கவாட்டு கதவு மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. மேலும், சிலையைச் சுற்றிலும், மதுபாட்டில்கள், கற்கள், மரக்கழிவுகள், குப்பைகள், புதர்கள் மண்டிக் காணப்படுகின்றன. அருகில் உள்ள விளம்பர பதாகை சரிந்து விழுந்ததில், பாரதியார் சிலையின் கழுத்துப் பகுதியும் லேசாக சேதமடைந்துள்ளது. இதனால் பாரதியார் பிறந்த மண்ணில் அவருடைய சிலை பராமரிப்பின்றி காணப்படுவதைக் கண்டு பல்வேறு அமைப்பினர் வேதனை தெரிவித்தனர். 
காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்: முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் பாரதியார் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவிக்க வந்த காங்கிரஸார், பாரதியார் சிலை உள்ள வளாகத்தின் மோசமான நிலையைக் கண்டு  மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் கூறுகையில், "பாரதியார் அவருடைய சொந்த மண்ணிலேயே அவமதிக்கப்படுவது வருத்தத்துக்குரியது. இங்குள்ள பாரதியார் சிலை எவ்வித பராமரிப்பும் இன்றி, சமூக விரோதிகளின் கூடாரமாகக் காட்சியளிக்கிறது. இங்கு சமூக விரோதிகள் மது அருந்துவதோடு, சில அசிங்கமான செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். இந்த சிலை பகுதியை ஆக்கிரமித்துள்ள வியாபாரிகள், தங்களின்  தள்ளுவண்டிகளையும் சிலையை சுற்றி விட்டுச் செல்கிறார்கள். இது சமூக விரோதிகளுக்கு வசதியாக போய்விடுகிறது.
எனவே, உடனடியாக பாரதியாரின் சிலை இருக்கும் வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும். பாரதியாரின் சிலையை இரவிலும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் மின் விளக்குகளை அமைக்க வேண்டும்.  பாரதியார் சிலை வளாகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும், சிலையைச் சுற்றி ஆக்கிரமித்திருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாகவியான பாரதியாரின் நினைவு நாளில்கூட அவருடைய சிலையை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது' என்றார்.
பாரதிக்கு அவமரியாதை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் கே.ஜி. பாஸ்கரன் கூறியது: பாரதியார் தேசியத் தமிழர். அவருடைய சிலை இருக்கும் வளாகம் பராமரிப்பின்றிக் காணப்படுவது வருத்தமளிக்கிறது. அதை உரிய முறையில் பராமரிக்க மாவட்ட நிர்வாகமும்,  மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எட்டயபுரத்தில் பாரதி பிறந்த நாளில் அரசு விழா எடுக்கிறார்கள். ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தில் அவருடைய பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் நடத்துவதில்லை. மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் படித்த அறையை இன்று வரை அப்படியே பராமரிக்கிறார்கள். ஆனால், அந்தப் பள்ளி அருகேயிருக்கும் பாரதியாரின் சிலையை பராமரிப்பின்றி வைத்திருக்கிறது மாவட்ட நிர்வாகம். அவருடைய பிறந்த நாளிலும், நினைவு நாளிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் வந்து மரியாதை செலுத்த வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பு. பாரதியாரின் சிலை பராமரிப்பின்றிக் கிடப்பது என்பது அவருக்கு நாம் செய்யும் அவமரியாதையாகும் என்றார்.
மாநகராட்சி ஏற்க வேண்டும்: எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் கூறுகையில், "அகில இந்திய வானொலி நிலையத்தில் (திருநெல்வேலி) பணிபுரிந்த  பாரதி அன்பர் ராமச்சந்திரனும், பாரதி ஹோட்டல் நிர்வாகமும் சேர்ந்து பாரதியாரின் சிலையை பராமரித்தார்கள்.  ராமச்சந்திரன் தனது சொந்தப் பணத்தில் பாரதி சிலையை பராமரித்ததோடு, சிலை இருக்கும் வளாகத்தை தினமும் பெருக்கி சுத்தமாக வைத்திருப்பார். அவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பிறகு அந்த சிலையை யாரும் பராமரிக்கவில்லை.
வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1908 மார்ச் 13-இல் நெல்லையில்  கலவரம் ஏற்பட்டது. அதுதான் நெல்லை எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அந்த  உக்கிர சம்பவத்தை (நெல்லை எழுச்சி) சுதேசமித்திரன், இந்தியா பத்திரிகைகள் மூலமாக வெளியுலகம் அறியச் செய்தவர் பாரதிதான். ஆனால், இப்போது நெல்லை எழுச்சி நாளில் வஉசி சிலைக்கு மட்டுமே மாலை அணிவிக்கிறார்கள். அவருக்கு இணையாக கொண்டாடப்பட வேண்டிய பாரதியை யாரும் நினைவுகொள்ளாதது வருத்தமளிக்கிறது. பாரதி சிலையை பராமரிக்க வேண்டிய பொறுப்பை மாநகராட்சி நிர்வாகம் ஏற்க வேண்டும்' என்றார்.

பதில் இல்லை
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மாநகராட்சி ஆணையர் பெ.விஜயலெட்சுமி ஆகியோரின் கருத்தை கேட்பதற்காக தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, இருவருமே அழைப்பை ஏற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com