சுடச்சுட

  

  "தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கொண்டு செல்லும் வாகனங்கள் பறிமுதல்'

  By DIN  |   Published on : 13th September 2019 10:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கொண்டு செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்.
  பான் மசாலா, புகையிலை மற்றும் நிக்கோடின் கலந்த குட்கா போன்ற புகையிலை பொருள்களுக்கான தடையை அமல்படுத்துதல் மற்றும் உணவு பாதுகாப்பு தர சட்டம் நடைமுறை படுத்துதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
  கூட்டத்தில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பேசியது: தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருள்கள் கொண்டு வருவது குறித்து இம்மாவட்டத்தின் அனைத்து எல்கை பகுதிகளிலும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அனைத்து உள்ளாட்சித்துறை அலுவலர்கள் தங்களது பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி அருகிலுள்ள கடைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பொது மக்களிடம் நிக்கோடின் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 
  அனைத்துக் கடைகளிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அதிகாரிகள் தங்களது பகுதியிலுள்ள கடைகளை தொடர் ஆய்வு மேற்கொள்வதுடன், அறிக்கை  சமர்ப்பிக்க வேண்டும்.  தடைசெய்யப்பட்ட பான் மசாலா குட்கா போன்ற பொருள்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அந்த வாகனத்தின் ஓட்டுநரின் உரிமமும் ரத்து செய்யப்படும். 
  பாதுகாப்பான உணவு அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே உணவு பாதுகாப்பு சட்டத்தின் நோக்கம். மேலும், உணவுப் பொருள்கள் தயார் செய்யப்பட்ட இடம், நாள், நேரம், காலாவதி காலம் போன்றவை அச்சிட வேண்டும். பொதுமக்கள் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்கள் தரமானதாக இல்லை என்று எண்ணினாலும், உணவுப் பொருள்களில் அதிக கலப்படம் உள்ளதாக அறிந்தாலும் அதனை விடியோ எடுத்து 94440 42322 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம்.
  மேலும் உணவு மாதிரியினை பரிசோதனை செய்ய உணவு பாதுகாப்பு அலுவலரிடம் வழங்க வேண்டும். புகார் தெரிவிக்கும் நபரின் அடையாளம் பாதுகாக்கப்படும். சிறு வியாபாரிகள் அனைவரும் உரிமம் பெற்றிட வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரி வளாகத்தில் உள்ள கடைகளுக்கு விரைவாக உரிமம் வழங்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள உணவுகள் தயாரித்து விற்பனை செய்யும் அனைத்துக் கோயில்களும் உணவு பாதுகாப்பு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்றார் அவர்.
  கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.வே.அருண்சக்திகுமார், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெகதீஸ், மாநகர நல அலுவலர் சதீஷ்குமார், அதிகாரிகள் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai