நெல்லை நகரத்தில் கடைகளை காலி செய்ய அவகாசம் கோரி வியாபாரிகள் போராட்டம்

திருநெல்வேலி நகரத்தில் காய்கனிச் சந்தையில் கடைகளை காலி செய்ய அவகாசம் கோரி வியாபாரிகள்

திருநெல்வேலி நகரத்தில் காய்கனிச் சந்தையில் கடைகளை காலி செய்ய அவகாசம் கோரி வியாபாரிகள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி நகரத்தின் மையத்தில் நெல்லையப்பர் கோயில் அருகில் இயங்கி வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காய்கனிச் சந்தையில் 350 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இச்சந்தைக்கு திருநெல்வேலி வட்டாரப் பகுதிகளில் இருந்து காய்கனிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.  இந்த பகுதியில் நூலகம், கோயில் ஆகியவை அமைந்துள்ளன. 
இந்நிலையில், மத்திய அரசின் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் இச்சந்தையை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிதாக சந்தை அமைக்க ரூ.10.97 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகவே, இங்குள்ள கடைகளை காலி செய்யுமாறு ஏற்கெனவே அளிக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்ததால் வரும் 15ஆம் தேதிக்குள் கடைகளை காலி செய்யுமாறுமாநகராட்சி ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்தும், கடைகளை காலி செய்ய பொங்கல் வரை கால அவகாசம் வழங்கக் கோரி வியாபாரிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு முன்னாள் பேரவை உறுப்பினர் என். மாலைராஜா தலைமை வகித்தார். அப்போது அவர்பேசியது: 
கடைகளை காலி செய்ய வழங்கிய அவகாசம் போதாது. பொங்கல் பண்டிகை வரை அவகாசம் வழங்க வேண்டும்.மேலும் வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக கட்டப்படும் வணிக  வளாகத்தில் முன்னுரிமை அடிப்படையில் தற்போதுள்ள வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்க வேண்டும் என்றார் அவர். 
பரபரப்பாக இயங்கம் இந்த சந்தை போராட்டம் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் குணசேகரன், நயன்சிங், சத்யா நாராயணன், பலவேசம் உள்பட பலர் பங்கேற்றனர்.
கோயிலை பாதுகாக்க வேண்டும்: இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் பேசியது: காய்கனி சந்தையில் இருந்து வியாபாரிகளை உடனடியாக அப்புறப்படுத்துவதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பதிக்கப்படும். இங்கு புதிய வணிக வளாகம் கட்டுமானப் பணியால் நெல்லையப்பர் கோயிலை பாதிக்காத வகையில் பணியினை மேற்கொள்ள வேண்டும். வியாபாரிகளுக்கு உரிய மாற்றும் இடம் வழங்க வேண்டும் என்றார் அவர்.
அப்போது, இந்து முன்னணியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் குற்றாலநாதன், மாவட்டச் செயலர்கள் சுடலை, சிவா, வினோத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com