Enable Javscript for better performance
தற்கொலை தடுப்பு: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    தற்கொலை தடுப்பு: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 14th September 2019 09:03 AM  |   அ+அ அ-   |    |  

    தற்கொலை தடுப்பு தொடர்பாக, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழப்பது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள் உயிரிழப்பதற்கு தற்கொலை முக்கியக் காரணமாக உள்ளது. அதைத் தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 10 முதல் 16 வரை தற்கொலை தடுப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் எஸ்.எம்.கண்ணன் தலைமை  வகித்தார். அவர் பேசியதாவது: வளரும் நாடுகளில் அதிகமானோர் தற்கொலையால் உயிரிழக்கின்றனர். வளர்ந்த நாடுகளில் 1லட்சம் பேரில் 10 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். வளரும்  நாடுகளில் அதிக அளவில் ஆண்களே தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலையால் உயிரிழக்கும் ஆண்-பெண் விகிதம் 3:1 என்ற நிலையில் உள்ளது. 15 வயது முதல் 30 வயது வரையில் உள்ளவர்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை எண்ணம் இருப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள மனநல ஆலோசகர்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 104 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பேசலாம். மனநல ஆலோசகர்கள் உரிய ஆலோசனை வழங்குவார்கள். தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்க 104 என்ற சேவை எண் செயல்பட்டு வருகிறது. 
    தற்கொலைக்கு முயற்சி செய்தவர்கள் மீண்டும் அந்த முயற்சியில் ஈடுபடாமல் இருக்க, அவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகும்போது அவர்களைப் பற்றிய விவரங்களைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு மாதம்தோறும் தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது என்றார்.
    இந்த விழாவுக்கு உயர் பல்நோக்குச் சிறப்பு மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். மனநலத் துறைப் பேராசிரியர் ராமானுஜம் வரவேற்றார். மனநலத் துறை உதவிப் பேராசிரியர் ஜீவா, உளவியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜாராமன், பட்ட மேற்படிப்பு மாணவி உஷாநந்தினி ஆகியோர் தற்கொலை குறித்து உரையாற்றினர்.  மனநலத் துறை உதவிப் பேராசிரியர் காட்சன் நன்றி கூறினார்.
     

    kattana sevai