நான்குனேரி இடைத்தேர்தல்: நடத்தை விதிகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, நடத்தை விதிகளை முறையாகப்

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, நடத்தை விதிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம், திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து விளக்கினார். விவரம்:
தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் தொடங்கப்பட்ட திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தலாம். பொது மைதானங்களில் தேர்தல் கூட்டங்களை நடத்துவதற்கு வேட்பாளர்களுக்கும், போட்டியிடும் அனைத்துக் கட்சிகளுக்கும் பாரபட்சமின்றி அனுமதி  வழங்கப்பட வேண்டும். கூட்டம் நடத்துவதற்கு இடம் மற்றும் நேரம் தொடர்பாக உள்ளுர் காவல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும். 
ஊர்வலம் குறித்து முன்கூட்டியே முடிவு செய்து காவல் துறையின் அனுமதி பெற வேண்டும். பொதுகூட்டங்கள் மற்றும் ஊர்வலத்தின்போது ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி பெறவேண்டும். மேற்படி கூட்டங்களை இரவு 10 மணிக்கு பின்னர் நடத்தக் கூடாது. பிரசார நாள்களில் காலை 6 மணிக்கு முன்னரோ, இரவு 10 மணிக்கு பின்னரோ வாகனங்களில் ஒலிபெருக்கி வைத்து பிரசாரம் செய்யக் கூடாது.
இஸ்ண்ஞ்ண்ப்  என்ற இணையதள செயலி மூலமாக தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம். தேர்தல் நடத்தை விதிகள் பற்றிய புகார் அல்லது பிரச்னை, தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர், மண்டல வட்டாட்சியர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். தேர்தல் பிரசார வாகன அனுமதி மற்றும் தடையில்லாச் சான்று பெறுவதற்கு நன்ஸ்ண்க்ட்ஹ செயலி மூலம் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரால் இது தொடர்பான தடையின்மை சான்று 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும்.
கட்சி, அரசின் சாதனைகள் தொடர்பாக எந்தவொரு விளம்பரமும் அரசு செலவில் செய்யக் கூடாது. வாக்காளர்களுக்கு பணம் வழங்குதலோ அல்லது பணம் வழங்குவதாக உறுதிமொழி அளிக்கவோ கூடாது. சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் விதமாக பிரசாரம் செய்யக் கூடாது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு இடங்களை தேர்தல் பிரசாரத்திற்கான இடமாக பயன்படுத்தக் கூடாது.
தேர்தலை நியாயமான மற்றும் அமைதியான முறையில் நடத்துவதற்கு அரசு அலுவலர்களுக்கு அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
புகார் வந்தால் நடவடிக்கை: பின்னர் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியது: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பயிற்சி குறித்த பணிகளை கவனிக்க மாவட்ட வருவாய் அலுவலரும், ஊடக சான்றிதழ் குழு மற்றும் ஊடக கண்காணிப்புக் குழு பணிகளை கவனிக்க மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரும், போக்குவரத்து பணிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரும் (வளர்ச்சி), தபால் வாக்குகள் தொடர்பான பணிகளை கண்காணிக்க சமூக பாதுகாப்பு வட்டாட்சியரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நான்குனேரி தொகுதியில் 3 பறக்கும் படை குழுக்களும், 3 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் மற்ற சட்டப்பேரவைத் தொகுதியில்1 பறக்கும்படை குழுவும், 1 நிலையான கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை செய்யப்படும். பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்லக் கூடாது.
தேர்தல் நடத்தை விதிகளை அனைத்துக் கட்சியினரும் முறையாகப் பின்பற்றவேண்டும். நடத்தை விதிமீறல்கள் குறித்து புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
இக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் விஜயலெட்சுமி, நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.நடராஜன், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை (செப்.23) தொடங்குகிறது.
நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஹெச்.வசந்தகுமார், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து நான்குனேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை (செப்.23) தொடங்குகிறது. இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியது:
நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு நாளான சனிக்கிழமைமுதல் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை (செப்.23) தொடங்குகிறது. நாங்குனேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடத்திலும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய் வட்டாட்சியரிடமும் பகல் 11 முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com