நான்குனேரி: போட்டியிடத் தயங்கும் முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள்!

நான்குனேரி இடைத்தேர்தலில் போட்டியிட கோடிக்கணக்கில் செலவிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால்,
நான்குனேரி: போட்டியிடத் தயங்கும் முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள்!

நான்குனேரி இடைத்தேர்தலில் போட்டியிட கோடிக்கணக்கில் செலவிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால், காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் வேட்பாளர் போட்டியிலிருந்து பின்வாங்க ஆரம்பித்துள்ளனர்.
நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஹெச்.வசந்தகுமார், கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். அதுமுதலே, நான்குனேரி இடைத்தேர்தல் மீது  திமுக, காங்கிரஸின் பார்வை திரும்பியது.
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் நான்குனேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டதால், அங்கு மீண்டும் காங்கிரஸ் வேட்பாளரையே களமிறக்க வேண்டும் என்பதில் நெல்லை மாவட்ட காங்கிரஸார் தீவிரமாக இருந்தனர். மேலும், காங்கிரஸ் கட்சியினர் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே அங்கு தேர்தல் பணியைத் தொடங்கினர்.
அதேநேரத்தில், திமுகவினரும் நான்குனேரி தொகுதியில் போட்டியிடுவதில் தீவிரம் காட்டி வந்தனர். எனினும், நெல்லை மாவட்ட காங்கிரஸார் நான்குனேரி தொகுதியில் களம் காணுவதில் தீவிரமாக இருந்தனர். தனித்துப் போட்டியிடவும் தயாராக இருந்தனர். அதனால், வேறு வழியின்றி இப்போது காங்கிரஸுக்கே மீண்டும் அந்தத் தொகுதியை கொடுத்துள்ளது திமுக. இதனால் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள்  உற்சாகம் அடைந்துள்ளனர்.
முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனின் உறவினரும், நெல்லை மாவட்ட காங்கிரஸ் அறக்கட்டளை செயலருமான எஸ்.டி.டி. ராஜேஷ், தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர் ஊர்வசி அமிர்தராஜ்,  வசந்தகுமாரின் மைத்துனர் எம்.எஸ்.காமராஜ்,  ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலருமான வானமாமலை, நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார், திருநாவுக்கரசரின் ஆதரவாளரான நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் தமிழ்செல்வன், மோகன்குமார் ராஜா, ஓபிசி பிரிவின் மாநில துணைத் தலைவர் வழக்குரைஞர் காமராஜ்,  முன்னாள் எம்எல்ஏ வேல்துரை ஆகியோர் நான்குனேரி தொகுதியில் போட்டியிடுவதில் தீவிரம் காட்டுவதாக கூறப்பட்டது.
முக்கியப் பிரமுகர்கள் தயக்கம்: திமுகவிடம் வற்புறுத்தி வாங்கியிருப்பதால், நான்குனேரி தொகுதி மக்களிடம் செல்வாக்கும், பணபலமும் கொண்ட ஒருவரை நிறுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. மேலும், நான்குனேரி இடைத்தேர்தலில் ரூ.20 கோடி வரை செலவிட இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
நான்குனேரியில் போட்டியிட ஊர்வசி அமிர்தராஜ்,  எஸ்.டி.டி.ராஜேஷ், எம்.எஸ்.காமராஜ் ஆகியோரில் ஒருவருக்கு காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்கலாம் என பரவலாக பேசப்பட்டது. ஆனால், நான்குனேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் என திமுக  தலைவர் ஸ்டாலின் அறிவித்த பிறகு, காங்கிரஸில் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது.
காங்கிரஸில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் யாரும் கோடிக்கணக்கில் செலவு செய்து நான்குனேரி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என கூறப்படுகிறது.  ஏனெனில் 2021-இல் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் வந்துவிடும். அதனால் சுமார் ஓராண்டு காலமே நீடிக்கும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்காக கோடிக்கணக்கில் செலவு செய்து இடைத்தேர்தலில் போட்டியிடுவது வீண் என முக்கிய பிரமுகர்கள் எண்ணுவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரூ.5 கோடி... தற்போதைய நிலையில், அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை செலவிடலாம், அதற்கு மேல் வாய்ப்பில்லை எனக் கூறி, நான்குனேரி தொகுதி வேட்பாளர் போட்டியிலிருக்கும் பெரும்பாலானோர் பின்வாங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  அதனால் பணபலம் கொண்ட முக்கியப் பிரமுகர்களில் யாராவது ஒருவரை நிறுத்துவதற்கு காங்கிரஸ் தலைமையும் முக்கிய நிர்வாகிகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கவுள்ள நிலையில், வேட்பாளரை தேர்வு செய்வதிலேயே காங்கிரஸுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. என்ன செய்யப்போகிறது காங்கிரஸ் தலைமை?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com