ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை கல்லிடைக்குறிச்சி வந்தது: மக்கள் உற்சாக வரவேற்பு

ஆஸ்திரேலியாவில் இருந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்ட, கல்லிடைக்குறிச்சி கோயில் நடராஜர் சிலை

ஆஸ்திரேலியாவில் இருந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்ட, கல்லிடைக்குறிச்சி கோயில் நடராஜர் சிலை செவ்வாய்க்கிழமை கோயிலில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. நடராஜர் சிலைக்கு கல்லிடைக்குறிச்சி மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் 700 ஆண்டுகள் பழைமைவாய்ந்த அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனுறை குலசேகரமுடையார் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இருந்து 1982 இல் 4 சிலைகள் காணாமல் போயின. இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், சிலை குறித்து எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற விசாரணையில், காணாமல் போனவற்றில் இருந்த நடராஜர் சிலை தெற்கு ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது.
இதற்கான ஆதாரங்களை அருங்காட்சியக நிர்வாகத்திடம் ஒப்படைத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு நடராஜர் சிலையை மீட்டு கடந்த 11 ஆம் தேதி சென்னைக்குக் கொண்டுவந்தனர்.
இதைத்தொடர்ந்து, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் நீதிமன்றத்தில் நடராஜர் சிலை திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், கல்லிடைக்குறிச்சி கோயிலில் சிலையை ஒப்படைக்கக் கோரி, இந்து அறநிலையத் துறை செயல் அலுவலர் வெங்கடேசன், கோயில் குருக்கள் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கோயிலில் சிலைக்கு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து, கும்பகோணத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு நடராஜர் சிலை பலத்த பாதுகாப்புடன் தென்காசிக்கும், பிறகு அங்கிருந்து செவ்வாய்க்கிழமை காலை கல்லிடைக்குறிச்சிக்கும் கொண்டுவரப்பட்டது.
கல்லிடைக்குறிச்சி ஐயப்பன் கோயில் முன் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு  நடராஜர் சிலைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு நடராஜர் சிலை அலங்கரிக்கப்பட்டு, பன்னிரு திருமுறைகளை தலையில் சுமந்த பெண் சிவனடியார் முன்னே செல்ல, பஞ்சவாத்தியம் முழங்க சப்பரத்தில் வைத்து ஊர்வலமாக குலசேகரமுடையார் கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டு, சிறப்பு ஆராதனைக்குப் பிறகு கோயிலுக்குள் கொண்டுசெல்லப்பட்டது.
பாராட்டு: நடராஜர் சிலை மீட்கப்பட்டு கோயிலுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து,  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு சிவனடியார்கள், பக்தர்கள், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். கல்லிடைக்குறிச்சி, கீழ தைக்காத் தெரு, ரஹ்மத் ஜூம்மா பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகளும் பொன் மாணிக்கவேலுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
பிறகு, பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் கூறியது:
சிலைக்கு உரிய பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக கோயில்களில்  சிலைகளைப் பாதுகாக்க, பாதுகாப்பு அறை அமைக்க 2017 இல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தக் கோயிலில் பாதுகாப்பு அறைகள் அமைக்கும்வரை ஆயுதமேந்திய போலீஸார் 4 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். மீட்கப்பட்ட இந்த நடராஜர் சிலையின் மதிப்பு சுமார் ரூ. 28 கோடி. 
இந்தக் கோயிலில் இருந்து காணாமல் போன மற்ற 3 சிலைகள் விரைவில் மீட்கப்படும் என்றார்.
அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், வி. மலைச்சாமி, காவல் துணைக் கண்காணிப்பாளர் கதிரவன் மற்றும் போலீஸார் உடனிருந்தனர்.
அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுபாஷினி, காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் சிவனடியார்கள், பக்தர்கள், இந்து முன்னணி நிர்வாகிகள், முன்னாள் பேரூராட்சித் தலைவர் இசக்கிப் பாண்டியன், காசிநாதர்கோயில் ராஜகோபுர குழுத் தலைவர் வாசுதேவராஜா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com