சேர்ந்தமரம் கொலை வழக்கு:  ஒருவர் கைது; 3 பேர் தலைமறைவு

திருநெல்வேலி மாவட்டம், சேர்ந்தமரம் அருகே 3 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொலை வழக்கு தொடர்பாக

திருநெல்வேலி மாவட்டம், சேர்ந்தமரம் அருகே 3 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொலை வழக்கு தொடர்பாக  ஒருவர் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். இந்த வழக்குத் தொடர்பாக மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கடையநல்லூர் அருகேயுள்ள பொய்கை என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜெ. முத்துராமலிங்கம் என்ற ஜோசப் (45). இவர், சேர்ந்தமரம் அருகே கோணமலையில் உள்ள கல்வெட்டான்குழியில் 15.6.2016இல் கொலையுண்ட நிலையில் கிடந்தார். 
இதுகுறித்து, சேர்ந்தமரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். புளியங்குடி டி.எஸ்.பி. சக்திவேல் தலைமையில் ஆய்வாளர்கள் கடையநல்லூர் கோவிந்தன், சிவகிரி சுரேஷ்குமார், பயிற்சி சார்பு ஆய்வாளர் கோபால், தலைமைக் காவலர்கள் ராஜசேகர், செல்வம், முதல்நிலைக் காவலர் சுடலைக்கண்ணு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை (செப். 23) இரவு திருமலாபுரம் விலக்குப் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது பைக்கில் வந்த ஒருவர், போலீஸாரைப் பார்த்ததும் தப்பியோட முயன்றார். அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
விசாரணையில், அவர் கரடிகுளத்தைச் சேர்ந்த ராமர்பாண்டி என்ற ராமர் (40) என்பதும், பொய்கை சோ. மாரியப்பன் என்பவரின் தூண்டுதலின்பேரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு பொய்கையைச் சேர்ந்த வெங்கடேஷ், கரடிகுளத்தைச் சேர்ந்த செண்பகராஜ் ஆகியோருடன் சேர்ந்து முத்துராமலிங்கம் என்ற ஜோசப்பை கொன்று கல்வெட்டான்குழியில் வீசியதாகவும் தெரியவந்தது.
 பொய்கை சோ. மாரியப்பன், திருநெல்வேலி மேற்கு மாவட்ட அமமுக செயலராக உள்ளார்.
இதையடுத்து, ராமர்பாண்டியை போலீஸார் கைதுசெய்து, அவரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய கத்தி,  பைக்கை பறிமுதல் செய்தனர். 
பொய்கை சோ. மாரியப்பன், செண்பகராஜ், வெங்கடேஷ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீஸாரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com