நவராத்திரி கொலு பொம்மைகள்: "அத்திவரதருக்கு' வரவேற்பு

நவராத்திரி விழாவையொட்டி, திருநெல்வேலியில் கொலுபொம்மைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

நவராத்திரி விழாவையொட்டி, திருநெல்வேலியில் கொலுபொம்மைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதில், அத்திவரதர் சிலையை பொதுமக்கள் விரும்பி வாங்கிச்செல்கின்றனர்.
அக்டோபர் முதல் வாரத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில், கொலு வைப்பது முக்கிய நிகழ்ச்சியாக உள்ளது. சுவாமி, அம்மன், தேசத் தலைவர்கள், பல்வேறு புராண காட்சிகளை விளக்கும் பொம்மைகள் கொலுவில் இடம்பெறும்.
நவராத்திரி விழாவையொட்டி, கடந்த சில நாள்களாக நெல்லையில் கொலுபொம்மைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்காக தஞ்சாவூர், கும்பகோணம், காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் இருந்து கொலுபொம்மைகள் விற்பனைக்காக திருநெல்வேலிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருநெல்வேலி நகரத்தைச் சேர்ந்த வியாபாரி கூறியது:  தஞ்சாவூர், மயிலாடுதுறை பகுதிகளில் இருந்து கொலுபொம்மைகள் அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன. களிமண்ணால் செய்யப்பட்ட கொலுபொம்மைகள் மீதான மக்களின் ஆர்வம் குறைந்துவிட்டதால், மக்களின் மனமாற்றத்துக்கு ஏற்ப காகிதக்கூழ், பீங்கான் ஆகியவற்றால் செய்யப்பட்ட கொலுபொம்மைகளும் விற்பனைக்கு வருகின்றன.
சிறிய கோயில்களிலும் கொலு வைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் பள்ளி-கல்லூரி மாணவிகளிடம் கொலுபொம்மைகள் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. ஹோட்டல், நகை கடைகள் போன்றவற்றிலும் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக கொலு வைக்கப்படுகிறது.
கொலு பொம்மையிலும் நவீனம் மற்றும் புதுமையை மக்கள் விரும்புகின்றனர். இசை விநாயகர், கிரிக்கெட் விநாயகர், தெப்பக்குளம் செட், பள்ளிக்கூடம் செட் போன்றவற்றுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. பொம்மை தயாரிக்கும் கலைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், விலைவாசி உயர்வாலும் கொலுபொம்மைகளின் விலை சற்று உயர்ந்துள்ளது என்றார்.
அத்திவரதருக்கு வரவேற்பு: பாளையங்கோட்டையைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், கொலுபொம்மைகளில் தற்போது அத்திவரதர் சிலைக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற அத்திவரதர் விழாவே இதற்குக் காரணம். அத்திவரதர் சிலைகள் ரூ. 500 முதல் ரூ. 3,000 வரையிலான  விலைகளில் கிடைக்கின்றன. இதுதவிர, நிகழாண்டில் ரூ. 150 முதல் ரூ. 7,000 வரை பல்வேறு வகையான சிலைகள் விற்பனைக்கு உள்ளன என்றார்.
"பூம்புகாரில்' தள்ளுபடி: தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் கீழ்,  திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் இயங்கும் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியுள்ளது. தஞ்சாவூர், மதுரை, திருச்சி, புதுச்சேரி பகுதிகளில் உற்பத்திசெய்யப்பட்ட கொலுபொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 10 முதல் இரவு 7 மணி வரை விற்பனை நடைபெறுகிறது. அனைத்து கொலுபொம்மைகளுக்கும் 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்படுகிறது என்றார் விற்பனை நிலைய மேலாளர் லட்சுமணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com