பாளை. தசரா விழா: மின் வயர்கள், மைதானத்தை சீரமைக்க வலியுறுத்தல்

பாளையங்கோட்டையில் தசரா விழா நடைபெறவுள்ளதையொட்டி, சப்பர வீதியுலா தெருக்களில் தாழ்வாகச் செல்லும்

பாளையங்கோட்டையில் தசரா விழா நடைபெறவுள்ளதையொட்டி, சப்பர வீதியுலா தெருக்களில் தாழ்வாகச் செல்லும் மின் வயர்கள், குப்பைகளால் நிறைந்துள்ள சூரசம்ஹார மைதானம் போன்றவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
பாளையங்கோட்டையில் தசரா விழாவையொட்டி, கடந்த சில நாள்களுக்கு முன்பு பந்தல்கால் நாட்டப்பட்டது. தசரா விழா வரும் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அந்த தினத்தில் இருந்து கொலு பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் தினமும் நடைபெறும். 
விழாவின் முக்கிய நிகழ்வாக அக்டோபர் 8 ஆம் தேதி தசரா திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். முதல் நாள் விழாவில், பாளையங்கோட்டையில் வீதியுலா வந்த 11 அம்மன்கள் மீண்டும் மின்விளக்கு அலங்காரத்துடன் எழுந்தருள்வர். அவர்களுடன் வண்ணார்பேட்டை பேராச்சி அம்மனும் சேர்ந்து 12 அம்மன்களும் தனித்தனி சப்பரங்களில் வீதியுலா வந்த பிறகு, 9 ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும்.
இந்நிலையில், தசரா விழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் போதிய அளவில் நடைபெறவில்லை என பக்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆயிரத்தம்மன் கோயில் ஆன்மிக சேவை அறக்கட்டளை 
நிர்வாகி முருகன் கூறியது:
தசரா விழாவையொட்டி, ராமர் கோயில் திடல், கோபாலசாமி கோயில் திடல், ஜவாஹர் மைதானம், சூரசம்ஹார மைதானம் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர். இந்த மைதானங்களில் தற்போது குப்பைகள் குவிந்துகிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்துவதோடு, பக்தர்கள் வசதிக்காக தற்காலிக கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.


இருக்கன்குடி மாரியம்மன் அடியார் பக்த சேவை அறக்கட்டளை நிர்வாகி யூ. ராஜீவ்காந்தி கூறியது:
பாளையங்கோட்டை தசரா விழாவில் 12 அம்மன்களின் வீதியுலா புகழ்பெற்றது. ராமசாமி கோயில் திடலில் சப்பரங்கள் அணிவகுக்கும்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர். ஆனால், சப்பரங்கள் செல்லும் மனக்காவலம்பிள்ளை மருத்துவமனை சாலை, பெருமாள் சன்னதி தெரு, தெற்கு கடைவீதிகளில் மின் வயர்கள் மிகவும் தாழ்வாக உள்ளன. அவற்றை சீரமைக்க மின் வாரியத்திற்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com