மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு: 2 பேர் கைது

சிவகிரி அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தது தொடர்பான வழக்கில் 2 பேரை திருநெல்வேலி

சிவகிரி அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தது தொடர்பான வழக்கில் 2 பேரை திருநெல்வேலி குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
சிவகிரி வட்டம் தேவிபட்டணத்தைச் சேர்ந்தவர் மன்னார் (39). இவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி காலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர், அன்றுமுதல் காணவில்லை என அவரது மனைவி மேரி சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் விசாரணையில் எந்த தீர்வும் எட்டப்படவில்லையாம். 
இந்நிலையில் மேரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 2018ஆம் ஆண்டு செப். 4ஆம் தேதி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து திருநெல்வேலி சரக குற்றப்புலனாய்வுத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் வி.அணில்குமார் தலைமையில், காவல் ஆய்வாளர் பி.உலகராணி, காவல் உதவி ஆய்வாளர் முனியாண்டி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மேகநாதன், முத்துப்பாண்டியன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.   விசாரணையில், மன்னார் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது, அப்பகுதியில் இருந்த பன்னீர்செல்வம் என்பவரது தோட்டத்தில் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
மேலும், தோட்ட உரிமையாளர்களான பன்னீர் செல்வம், அவரது மனைவி பாப்பா, மருமகன் பாலகுரு ஆகியோர் யாருக்கும் தெரியாமல் சடலத்தை தோட்டத்துக்குள்ளேயே புதைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. 
இதற்கிடையே பன்னீர் செல்வம் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். எனவே இந்த வழக்கில் பன்னீர் செல்வத்தின் மனைவி பாப்பா, பாலகுரு ஆகியோரை திருநெல்வேலி குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கு குறித்து விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாபு, அவர்கள் இருவரையும் அக்.4ஆம் தேதிவரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com