சுதந்திரப் போராட்ட வரலாற்றை திருத்தியமைக்க வேண்டும்!: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றை திருத்தியமைத்து புதுப்பிக்க வேண்டிய உச்சகட்ட தருணம் இது என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கூறினார்.
சுதந்திரப் போராட்ட வரலாற்றை திருத்தியமைக்க வேண்டும்!: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்


இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றை திருத்தியமைத்து புதுப்பிக்க வேண்டிய உச்சகட்ட தருணம் இது என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கூறினார்.
சுதந்திரப் போராட்ட வரலாறு - மீள்பார்வை என்ற தலைப்பிலான ஆங்கில கலந்துரையாடல் அமர்வு சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னை இண்டர்நேஷனல் சென்டர் சார்பில் நடைபெற்ற அந்த நிகழ்வில் பிரதமர் அலுவலகப் பொருளாதார ஆலோசகரும், பொருளாதார நிபுணரும், வரலாற்று ஆய்வாளருமான சஞ்சீவ் சன்யால் பங்கேற்றார். இந் நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசியதாவது:
தேசத்தின் விடுதலை வரலாற்றில் லட்சக்கணக்கான வீரர்களின் தன்னலமற்ற தியாகங்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இன்றளவும் அந்த நாயகர்கள் பலரை நாம் நினைவில் வைத்து போற்றுகிறோம் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
அதேவேளையில், தங்களது வாழ்வையே நாட்டுக்காக அர்ப்பணித்த எத்தனையோ வீரர்களும், அவர்தம் தியாகங்களும் சமகாலத் தலைமுறையினருக்குக்  கொண்டு சேர்க்கப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. அதிலும், குறிப்பாக  தென்னிந்திய மாநிலங்கள் சுதந்திரப் போராட்டத்துக்கு அளித்த அளப்பரிய பங்கு வரலாற்றுப் பக்கங்களில் பதிவாகவில்லை. அவை மறைக்கப்பட்டனவா அல்லது வரலாறு எழுதியவர்கள் தென்னிந்தியப் பங்களிப்பை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லையா என்று தெரியவில்லை.
 பிரிட்டன் ஆட்சியாளர்களுக்கு அடிபணிய மறுத்து இந்திய கடற்படையினர் 1946-இல் பம்பாய் கலகம் நடத்தியதற்கு ஏறத்தாழ 140 ஆண்டுகளுக்கு முன்பே வேலூரில் சிப்பாய்ப் புரட்சி அரங்கேறிவிட்டது. சொல்லப்போனால், 1806-ஆம் ஆண்டில் நடைபெற்ற அந்தப் புரட்சிதான் தேசம் முழுவதும் பல்வேறு போராட்டங்களுக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. அப்போது பிரிட்டனின் ராணுவ வலிமையையும் மீறி வேலூர் கோட்டையைக் கைப்பற்றி இந்தியப் புரட்சியாளர்கள், சுதந்திரத்துக்கான நம்பிக்கை விதையை விதைத்தனர். 1857-இல் நடந்த சிப்பாய் கலகம்தான் முன்னிலைப்படுத்தப்படுகிறதே தவிர, வேலூர் புரட்சியைப் பற்றி தமிழகம் மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறது.
அதுபோலவே 1800-ஆம் ஆண்டிலேயே கோயம்புத்தூர் பிரிட்டிஷ் கோட்டையைக் கைப்பற்ற போராட்டக்காரர்கள் முயற்சி மேற்கொண்டனர். அதற்கு பழநி சதி வழக்கு என்று பெயர். இந்தச் சாதனை நிகழ்வு சரித்திரத்தில் இடம்பெறவில்லை.
அதுபோலவே, ஆர்யா என்று அறியப்படும் பாஷ்யம் என்ற ஆகச்சிறந்த தேசபக்தனையும், புரட்சியாளனையும் வரலாறு வசமாக்கிக் கொள்ளத் தவறிவிட்டது. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற வேள்வி அவரது மனதில் கனலாக எரிந்து கொண்டிருந்தது. 1932-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதியன்று பிரிட்டிஷ் படையினரின் கடுமையான கண்காணிப்பையும் மீறி அந்த கனவை நினைவாக்கினார் ஆர்யா பாஷ்யம். அடுத்த நாள் காலை கோட்டையில் இந்தியக் கொடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்த்த பிரிட்டன் ஆட்சியாளர்கள் அடைந்த அதிர்ச்சி, வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.
அத்தகைய துணிச்சல் மிக்க வீரரின் பெயரைக்கூட சமகாலத்தினர் அறியாத நிலை உருவாகியிருப்பது வேதனைக்குரியது. விடுதலைக் களத்தில், இவ்வாறு வ.வே.சு. ஐயர், வாஞ்சிநாதன், ஆர்யா உள்ளிட்ட தென்னிந்தியப் புரட்சியாளர்களின் பங்களிப்பைப் பதிவு செய்யாமல் புறந்தள்ளியதால்தானோ என்னவோ, இங்கு தேசியவாத உணர்வு குறைவாக இருக்கிறது என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.
முன்னதாக, கலந்துரையாடல் அமர்வில் சஞ்சீவ் சன்யால் பேசியதாவது:
இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு நீண்ட, நெடிய வரலாறு உள்ளது. அஹிம்சை போராட்டமாகவும், ஆயுதமேந்திய போராட்டமாகவும் அதனை இரு வேறாக வரலாறு வரையறுத்து 
வைத்திருக்கிறது.
அதில், பழங்குடியினரின் போராட்டங்கள், வடகிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட சுதந்திர வேள்விகள் என பல விஷயங்கள் வரலாற்றுக்கு வந்து சேரவில்லை.
அந்த வரிசையில் சாவர்க்கர் முன்னெடுத்த போராட்டங்களும், அவர் வழி தொட்டு பல புரட்சியாளர்கள் செய்த தியாகங்களும் சரி வரப் பதிவாகவில்லை. சொல்லப்போனால், சாவர்க்கர் எழுதிய இந்திய சுதந்திரப் போராட்டம் - 1857 என்ற புத்தகம்தான் பல புரட்சியாளர்களையே உருவாக்கியது. ஆயுதமேந்திய போராட்டத்தின் வேத நூலாகவும் அது விளங்குகிறது. அத்தகைய புகழ்மிக்க சாவர்க்கரை சமகாலத் தலைமுறையினருக்கு அறிமுகம் செய்ய வேண்டிய நிலை இருப்பது கவலைக்குரிய விஷயம்.
ராஷ்பிகாரி போஸ், சுபாஷ் சந்திரபோஸ், சச்சீந்திரநாத் சன்யால் போன்ற வங்கத்தின் புரட்சியாளர்களின் பங்களிப்பு போதிய கவனம் பெறவில்லை. வரலாற்றுப் பாடநூல்களில் காந்தியடிகளின் வழியொற்றிப் பயணித்தவர்கள்தான் இடம் பெறுகிறார்களே தவிர, மாற்று வழியான புரட்சிப் பாதையில் பயணித்தவர்கள் இடம் பெறவில்லை.
வ.வே.சு.ஐயர், பாரதி, அரவிந்தர், சாவர்க்கர் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் நன்கு அறிமுகமானவர்கள் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. விடுதலை போராட்டத்தில் அவர்கள் பல தருணங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டிருக்கிறார்கள். பாரதியின் கருத்துகளை சற்று கூர்ந்து கவனித்தால், அதில் சாவர்க்கரும், அரவிந்தரும், வ.வே.சு.ஐயரும் வந்து போவதை உணர முடியும். பல்வேறு காலகட்டங்களில் புரட்சியாளர்கள் நூலிழையில் வெற்றி நழுவவிட்டனர். சந்தர்ப்பம் அவர்களுக்கு சாதகமாக இருக்கவில்லை. ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் இந்திய வரலாறு வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும். விடுதலைப் போராட்டத்தில் புரட்சியாளர்களின் பங்கையும் வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும். திருத்தி எழுத வேண்டும் என்றார் சஞ்சீவ் சன்யால்.

3

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com