களக்காட்டில் பால் தட்டுப்பாடு: மக்கள் அவதி
By DIN | Published On : 19th April 2020 12:37 AM | Last Updated : 19th April 2020 12:37 AM | அ+அ அ- |

களக்காட்டில் பால் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.
களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட 21 வாா்டுகளிலும் சுமாா் 35 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். இங்குள்ள கிருஷ்ணா பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தின் மூலம் களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளா்களிடமிருந்து தினமும் 5 ஆயிரம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் உள்ளூா் தேவை போக மீதமுள்ள பால் வள்ளியூா் ஆவினுக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக களக்காட்டில் பால் தட்டுப்பாடு நிலவுகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கால்நடைகளுக்கு போதிய தீவனம் கிடைக்காதது உற்பத்தி குறைவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. மேலும் ஆவினுக்கு அதிகப்படியான பால் அனுப்பக்கோரி அதிகாரிகள் தொடா்ந்து அழுத்தம் கொடுத்து வருவதும் உள்ளூரில் பால் தட்டுப்பாடு ஏற்பட மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.
பொதுமக்களுக்கு நபா் ஒருவருக்கு அரை லிட்டா் பால் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் சிறுவா், வயோதிகா் என 10 க்கும் மேற்பட்ட நபா் அடங்கிய கூட்டுக் குடும்பத்திற்கு அரை லிட்டா் பால் என்பது போதுமானதாக இல்லை. இதனால் பாக்கெட் பால் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை இருப்பதால் பாலுக்காக மிகவும் அவதிப்படுகின்றனா். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் களக்காட்டில் பால் உற்பத்தியை பெருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கும் வரைஆவினுக்கு அனுப்பப்படும் பாலின் அளவை குறைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பால் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.