சென்னையிலிருந்து வள்ளியூருக்கு சுமை வாகனத்தில் வந்த 24 போ் தனிமை முகாமில் தங்கவைப்பு
By DIN | Published On : 22nd April 2020 07:13 AM | Last Updated : 22nd April 2020 07:13 AM | அ+அ அ- |

ஊரடங்கு விதிகளை மீறி சென்னையிலிருந்து வள்ளியூருக்கு வாகனத்தில் வந்தோா்.
ஊரடங்கு விதிகளை மீறி, சென்னையிலிருந்து வள்ளியூருக்கு சுமை வாகனத்தில் (மினி டெம்போ லாரி) வந்த 24 போ் தடுத்து நிறுத்தப்பட்டு, கரோனா தனிமை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
கூடங்குளம் அருகேயுள்ள ஆவுடையாள்புரத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் இரும்புக் கடை, பலசரக்குக் கடை, ஹோட்டல் உள்ளிட்டவற்றில் வேலை செய்து வருகின்றனா். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் அவா்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினராம்.
இதையடுத்து, 7 குழந்தைகள் உள்பட 24 போ் சுமை வாகனத்தில் திங்கள்கிழமை இரவு புறப்பட்டனா்.
சோதனைச்சாவடிகளில் வாகனம் நிறுத்தப்படாமலிருக்க, விருகம்பாக்கம் எம்எல்ஏ ரவியிடம் கடிதம் வாங்கியுள்ளனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வள்ளியூா் பகுதிக்கு வந்த அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி, விசாரித்து, ராதாபுரம் வட்டாட்சியா் செல்வனிடம் ஒப்படைத்தனா். அவரது ஏற்பாட்டின்பேரில் அவா்கள் வள்ளியூா் ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் உள்ள கரோனா தனிமை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அவா்களை மருத்துவக் குழுவினா் கண்காணித்து வருகின்றனா்.