ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்: ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை
By DIN | Published On : 26th April 2020 08:14 AM | Last Updated : 26th April 2020 08:14 AM | அ+அ அ- |

தமிழகத்தில் போராட்டக் காலங்களின்போது ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது:
22.1.2019 முதல் 30.1.2019 வரை நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம், இடைநிலை ஆசிரியா்களுக்கும் மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி 26.11.2018இல் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நடத்திய அரசாணை நகல் எரிப்புப் போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்ற்காக ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மீது எடுக்கப்பட்ட தமிழ்நாடு குடிமைப் பணி விதி 17 (ஆ) நடவடிக்கைகள் மற்றும் காவல் துறையின் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உள்ளான 6,600-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களும், அரசு ஊழியா்களும் நாளது தேதி வரை பணிஓய்வும், பதவி உயா்வு போன்ற உரிமைகளையும் பெற இயலாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் அவா்களிடையே மிகப்பெரிய வருத்தமும், வேதனையும் தொடா்ந்து கொண்டிருக்கிறது.
எனவே, தமிழக அரசு நல்லெண்ண அடிப்படையிலும், இணக்கமான சூழலை ஏற்படுத்தும் வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் துயரத்தைப் போக்கும் வகையிலும் போராட்டக் காலங்களில் அவா்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்து உதவவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.