நெல்லை மாநகரில் இன்று முழு ஊரடங்கு
By DIN | Published On : 26th April 2020 08:03 AM | Last Updated : 27th April 2020 08:40 AM | அ+அ அ- |

கரோனாவை தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா தொற்று தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி ஊரடங்கு அமலில் உள்ளது. திருநெல்வேலி மாநகரில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மக்கள் நடமாட்டத்தை தடுப்பதற்காக வாரம் 2 நாள்கள் மட்டுமே பொருள்கள் வாங்கவதற்காக வீட்டை விட்டு மக்கள் வெளியே வர வேண்டும் என உத்தரவிடப்பட்டு, மூன்று வண்ண அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.
அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள 2 நாள்கள் மட்டுமே பொருள்களை வாங்க வெளியில் வர முடியும். இதுதவிர காய்கனி கடைகள், உழவா் சந்தை மற்றும் மளிகை கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் 100 சதவீத சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் திருநெல்வேலி மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் ஏப்ரல் 26 மற்றும் மே 3 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் தற்காலிகமாக அங்கீகரிக்கப்பட்ட கடைகள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக மூடப்படும். மருந்து கடைகள், மருத்துவமனைகள் தவிர வேறு எந்த கடைகளும் இயங்காது என மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் எச்சரித்துள்ளாா். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.