பாபநாசம் மலையடிவாரப் பகுதியில் ஒரே மாதத்தில் சிக்கிய 3 சிறுத்தைகள்: மக்கள் அச்சம்
By DIN | Published On : 27th April 2020 08:27 AM | Last Updated : 27th April 2020 08:27 AM | அ+அ அ- |

பாபநாசம் மலையடிவாரப் பகுதியில் சனிக்கிழமை பிடிபட்ட சிறுத்தை.
பாபநாசம் மலை அடிவாரப் பகுதியில் ஒரே மாதத்தில் 3 சிறுத்தைகள் கூண்டில் சிக்கியதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்ட ஆலடியூா் வனக்காவல் பகுதி மலையடிவார கிராமங்களான கோரையாா்குளம், வேம்பையாபுரம், செட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்தது. வீட்டில் கட்டிப்போடப்பட்டுள்ள நாய், ஆடு போன்றவற்றை கொன்று தின்று வந்த சிறுத்தைகளைப் பிடித்து வனத்தில் விட வேண்டும் என வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, வனத்துறையினா் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனா். அதில், மாா்ச் 29, ஏப். 12, 25 ஆகிய தேதிகளில் 3 பெண் சிறுத்தைகள் பிடிபட்டன. முதல் 2 சிறுத்தைகள் கவுதலையாறு வனப்பகுதியிலும், 3ஆவது சிறுத்தை காரையாறு வனப்பகுதியிலும் விடப்பட்டன.
ஒரு மாதத்தில் 3 சிறுத்தைகள் பிடிபட்டதால் அச்சம் அடைந்துள்ள அப்பகுதி மக்கள், மலையடிவாரப் பகுதியில் மேலும் சிறுத்தைகள் சுற்றித்திரிய வாய்ப்புள்ளது என்றும், அவற்றை கண்காணித்து பிடித்து வேறு வனப்பகுதியில் கொண்டு விட வேண்டும். வன விலங்குகள் காப்பக பகுதிகளை மீறி வெளியேறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும். மலையடிவாரப் பகுதியில் முறையாக மின்வேலி, அகழி உள்ளிட்டவற்றை அமைத்து மக்களையும், வீட்டு விலங்குகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.