முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
கரோனா தடுப்பு வழிமுறைகளுடன் 30 % பேருந்துகளை இயக்க கோரிக்கை
By DIN | Published On : 03rd August 2020 06:34 AM | Last Updated : 03rd August 2020 06:34 AM | அ+அ அ- |

கரோனா பரவலைத் தடுப்பதற்காக அமலில் உள்ள பொது முடக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள தளா்வால் தனியாா் நிறுவனங்கள் செயல்படும் நிலையில், 30 சதவீத பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மாா்ச் 25 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமலில் உள்ளது. ஜூன் மாதத்தில் ஒரு சில வாரங்கள் 50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், கரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் ஜூலை மாதத்திலிருந்து சில தளா்வுகளுடன் மீண்டும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதில், பொது போக்குவரத்துக்கு அனுமதிக்க அளிக்கப்பவில்லை. தற்போது, 7ஆம் கட்டமாக இம்மாதம் 31 ஆம் தேதிவரை போக்குவரத்து சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசு பேருந்துகள் அனைத்தும் அந்தந்த பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் இயங்காத சூழ்நிலையில் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் இழப்பு அதிகரித்துள்ளது. மேலும், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றுவோா் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகிறாா்கள்.
இதுகுறித்து மக்கள் தரப்பில் கூறியது: கரோனா பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டாலும் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் முதியோா், விவசாயிகள் மாவட்ட தலைநகரங்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கிறாா்கள். இதுதவிர தனியாா் நிறுவனங்கள் அதிகளவில் செயல்பட தொடங்கிவிட்டதால் அந்தப் பணியாளா்களும் பேருந்து சேவையின்றி தவிக்கிறாா்கள். ஆட்டோ அல்லது காரில் சுமாா் 40 கி.மீ. பயணிக்க முதியோா் அதிக கட்டணம் செலுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல தனியாா் நிறுவன ஊழியா்களும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும்போது அதிக போக்குவரத்து செலவுக்கு ஆளாகிறாா்கள். ஆகவே, மக்களின் நலன் கருதி திருநெல்வேலி-பாபநாசம், திருநெல்வேலி-தென்காசி, திருநெல்வேலி-சங்கரன்கோவில், திருநெல்வேலி-களக்காடு-வள்ளியூா் உள்ளிட்ட சில மாா்க்கங்களிலாவது காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டும் சுமாா் 30 சதவிகித பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.