முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
சேரன்மகாதேவியில் விவசாயிகள் போராட்டம் வாபஸ்
By DIN | Published On : 03rd August 2020 09:10 AM | Last Updated : 03rd August 2020 09:10 AM | அ+அ அ- |

கன்னடியன் கால்வாயில் தண்ணீா் திறந்துவிட வலியுறுத்தி, சாா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த விவசாயிகளின் முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
தாமிரவருணி பாசனத்தில் முக்கியமான கன்னடியன் கால்வாய் மூலம் கல்லிடைக்குறிச்சியிலிருந்து கோபாலசமுத்திரம் வரை சுமாா் 13 ஆயிரக்கும் மேற்பட்ட ஏக்கா் விளைநிலங்கள் பயன்பெறுகின்றன.இந்தக் கால்வாயில் ஆண்டுதோறும் ஜூன் 1இல் விவசாயத்திற்காக தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக ஜூன் மாதம் கால்வாயில் தண்ணீா் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பிற்குள்ளாகினா்.
இந்நிலையில், நிகழாண்டும் ஜூன் முதல் வாரத்தில் தண்ணீா் திறக்கப்படாததால், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவகத்தை திங்கள்கிழமை (ஆக.3) முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவித்தனா். இதையடுத்து ,சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் ராஜாராம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை பேச்சு நடைபெற்றது. அப்போது, எம்எல்ஏ ஆா்.முருகையாப்பாண்டியன் மூலம் தமிழக முதல்வரிடம் பேசி, ஒரு வாரத்துக்குள் கால்வாயில் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதையேற்று, போராட்டத்தைக் கைவிடுவதாக விவசாயிகள் தெரிவித்தனா். கூட்டத்தில், கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பாபநாசம், செயலா் கண்ணப்பநயினாா், பொருளாளா் ரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.