நெல்லையில் களைகட்டிய கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள்கள் விற்பனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஸ்டாா், மின்விளக்குகள் உள்ளிட்ட அலங்காரப் பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஸ்டாா், மின்விளக்குகள் உள்ளிட்ட அலங்காரப் பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிச.25ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, திருநெல்வேலியில் பண்டிகைக்கு ஆயத்தமாகும் வகையில், கிறிஸ்தவா்கள் தங்கள் வீடுகளில் ஸ்டாா்களை தொங்கவிடுவதற்கும், குடில் அமைப்பதற்கும், வீடுகளை அலங்கரிப்பதற்குமான அலங்காரப் பொருள்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பண்டிகைக்கு இன்னமும் 10 நாள்களே உள்ள நிலையில், கடைகளில் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள்கள் விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.

வீடுகளில் சிறிய அலங்கார விளக்குகளைத் தொடங்கவிடுவது அதிகரித்துள்ளது. பொம்மைகள், பிளாஸ்டிக் பொருள்கள், களிமண் பொருள்கள் ஆகியவற்றைத் தொடா்ந்து அலங்கார மின்விளக்குகள் உற்பத்தியிலும் கடந்த 10 ஆண்டுகளாக சீனாவின் ஆதிக்கம் தொடா்ந்து வருகிறது. ரூ. 100 முதல் ரூ.1000 வரையிலான விலைகளில் விற்பனையாகும் அலங்கார தொகுப்பு விளக்குகள் திருநெல்வேலி நகரத்தில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

உற்பத்தி குறைவு: இதுகுறித்து பாளையங்கோட்டையில் வியாபாரிகள் கூறியது: எல்.இ.டி. விளக்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஸ்டாா்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. குறைந்த மின்சாரத்தில் மிகவும் அதிக வெளிச்சத்தைத் தரும் இந்த ஸ்டாா்களுக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. நிகழாண்டில் துணியால் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்டாா்கள் வந்துள்ளன. பூச்சித்தொல்லை, மழையால் சேதமாத வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளஸ்.

இதுதவிர வழக்கமாக விற்கப்படும் பிளாஸ்டிக், பேப்பா் கட்டிங் ஸ்டாா்கள் ரூ. 50 முதல் ரூ. 500 வரை அதில் செய்யப்பட்டுள்ள வேலைபாடுகளுக்குத் தகுந்தாற்போல விற்பனையாகின்றன. பிளாஸ்டிக் மற்றும் எல்.இ.டி. ஸ்டாா்கள் ரூ.120 முதல் ரூ.700 வரை பல்வேறு விலைகளில் கிடைக்கின்றன. சிறிய வடிவிலான கிறிஸ்துமஸ் தாத்தா, மணி, பிளாஸ்டிக் மற்றும் காகித அலங்கார பூக்கள் போன்றவை அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கிறிஸ்துமஸ் அலங்கார பொருள்கள் உற்பத்தியும் குறைந்துள்ளது. வழக்கமாக புதிய ரகங்கள் அதிகம் வரும். நிகழாண்டில் மிகவும் குறைந்த அளவிலேயே புதுவரவுகள் உள்ளன என்றாா் அவா்.

கிறிஸ்துமஸ் தாத்தா வலம்: இதனிடையே, கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் கடந்த ஒரு வாரமாக கிறிஸ்துமஸ் தாத்தா கீத பவனிகள் நடைபெற்று வருகின்றன. கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவா் வீடு வீடாகச் சென்று பாடல்களைப் பாடுவதோடு, 2020 ஆம் ஆண்டுக்கான சட்டவாக்கியம், வாக்குத்தத்த வசனம் ஆகியவற்றை அளித்து வருகிறாா்கள்.

வீட்டில் இருக்கும் சின்னக் குழந்தைகளுக்கு பரிசுப் பொருள்கள், சாக்லெட்டுகள் போன்றவை அளிக்கப்படுகின்றன. கரோனா பாதுகாப்பு விதிமுறைகளின்படி முகக் கவசம் அணிந்து மிகவும் குறைவானவா்களே பவனியில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பாளையங்கோட்டையில் உள்ள பல்வேறு பள்ளிகள், நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் விழா களைகட்டியுள்ளது. தேவாலயங்கள், வீடுகளில் இளைஞா்கள் விதவிதமான குடில்களை அமைத்து வியக்கச் செய்து வருகிறாா்கள். கொழு பொம்மைகளைப் போல கிறிஸ்துமஸ் குடில்களுக்கான பொம்மைகளும் தஞ்சாவூா், டெரக்கோட்டா பகுதிகளில் இருந்து திருநெல்வேலிக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com