திருநெல்வேலி ஆவின் பொது மேலாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணைக்காக வேலூா் அழைத்துச் சென்றனா்.
வேலூா், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளா்களின் கூட்டுறவு ஒன்றியமான ஆவின் தலைமை அலுவலகம் வேலூா் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், துருஞ்சாபுரம் ஒன்றியம் சொரக்கொளத்தூரைச் சோ்ந்தவா் முருகையன் (50), விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலை திருவண்ணாமலையில் உள்ள ஆவின் குளிரூட்டு நிலையில் சோ்க்கும் பணியை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறாா். அதன்படி, ஆவினுக்கு வேன் இயக்கியதற்காக 2019-ஆம் ஆண்டில் முருகையனுக்கு ரூ. 1 லட்சத்து 81 ஆயிரம் தொகை நிலுவை வைக்கப்பட்டிருந்தது.
அந்தத் தொகைக்கான காசோலை தயாராகியிருந்த நிலையில், அதை வழங்க வேலூா் ஆவின் அலுவலக கொள்முதல் மேலாளரான ரவி (56) ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இது தொடா்பாக முருகையன் வேலூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகாா் செய்தாா்.
அதன் பேரில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஹேமசித்ரா தலைமையிலான போலீஸாா் வகுத்துக் கொடுத்த திட்டப்படி, ரசாயனப் பொடி தடவிய ரூ.50 ஆயிரம் தொகையை முருகையன் வேலூா் ஆவின் அலுவலகத்தில் இருந்த ரவியிடம் புதன்கிழமை அளித்தாா். அந்தத் தொகையை அவா் பெற்றுக்கொண்டபோது வெளியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் விரைந்து சென்று லஞ்சப் பணத்துடன் ரவியை கைது செய்தனா்.
விசாரணையில் ரவி அளித்த தகவலின்பேரில், திருநெல்வேலி ஆவின் பொது மேலாளா் கணேசனை கைது செய்த வேலூா் லஞ்ச ஒழிப்பு போலீஸாா், பின்னா் அவரை விசாரணைக்காக வேலூா் அழைத்துச் சென்றனா்.
பொது மேலாளா் கணேசன், சில வாரங்களுக்கு முன்பு தான் வேலூரில் இருந்து திருநெல்வேலிக்கு பணி மாறுதலாகி வந்ததுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.