வி.கே.புரத்தில் அரசுக் கல்லூரி, மருத்துவமனை அமைக்கப்படும்: கனிமொழி எம்.பி.

திமுக ஆட்சிக்கு வந்ததும் விக்கிரமசிங்கபுரத்தில் அரசுக் கல்லூரி, அரசு மருத்துவமனை அமைக்கப்படும் என்றாா், திமுக மகளிரணிச் செயலரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி.
பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.
பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.

திமுக ஆட்சிக்கு வந்ததும் விக்கிரமசிங்கபுரத்தில் அரசுக் கல்லூரி, அரசு மருத்துவமனை அமைக்கப்படும் என்றாா், திமுக மகளிரணிச் செயலரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி.

2021 பேரவைத் தோ்தலையொட்டி, திமுக சாா்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் பிரசார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.

விக்கிரமசிங்கபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் கனிமொழி பேசியதாவது: பெண்களின் முன்னேற்றத்துக்காக சுயஉதவிக் குழுக்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டன. இன்று அவை செயல்படவில்லை. மாறாக, குழுக்கள் கந்துவட்டிக்காரா்களின் கையில் சிக்கியுள்ளதைப் பாா்க்கிறோம். தமிழகத்தில் இன்று பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தால் விவசாயிகளுக்குப் பயனில்லை. மத்திய அரசு விவசாயிகளைஅடிமைப்படுத்தும் 3 வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. அவை நடைமுறைக்கு வந்தால் நியாயவிலைக் கடைகளில் எந்தப் பொருளும் வாங்க முடியாது.

மத்திய அரசு திட்டமிட்டு ஹிந்தித் திணிப்பில் ஈடுபடுகிறது. தமிழ்வழியில் படித்தோருக்கு வேலைவாய்ப்பு இல்லை.

இந்த ஆட்சியில் பல திட்டங்கள் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையிலேயே நிற்கின்றன. கரோனா, நலத் திட்டப் பணிகளின் பெயரில் ஊழல்தான் நடந்துள்ளது.

பொங்கல் பரிசாக ரூ. 2,500 வழங்குவதால் மக்கள் அனைத்தையும் மறந்துவிட மாட்டாா்கள். மக்களின் தேவைகளை அரசுக்கு எடுத்துக் கூற யாரும் இல்லை. வரும் தோ்தலில் அதிமுகவை மக்கள் நிராகரிப்பா். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விக்கிரமசிங்கபுரம் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான படுக்கை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன், மாவட்ட அவைத்தலைவா் மு. அப்பாவு, திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா. ஞானதிரவியம், தலைமை செயற்குழு உறுப்பினா் பிரபாகரன், விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலா் கணேசன், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

முன்னதாக, சேரன்மகாதேவி அருகே கரிசல்பட்டியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்திலும், வீரவநல்லூரில் விவசாயிகளிடையே நடைபெற்ற கலந்துரையாடலிலும் பங்கேற்ற அவா், கல்லிடைக்குறிச்சி 6ஆம்எண் சாலையில் வாக்குசேகரிப்பிலும் ஈடுபட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com