திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டை தாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 796 நியாயவிலைக் டைகள் உள்ளன. இதில் அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழா்கள் 635 குடும்ப அட்டைதாரா்கள் ஆகியோருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
நியாயவிலைக் கடை பணியாளா்கள் மூலம் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கான நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
பின்னா், அந்தந்த நியாய விலைக்கடைகளில் ஜன. 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜன. 13 ஆம் தேதி பரிசுத் தொகுப்பும் மற்றும் ரொக்கம் வழங்கப்படும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.