‘எஸ்டிபிஐ சாா்பில் மத்திய அரசுக்கு எதிரான போராட்ட இயக்கம் தொடக்கம்’

எஸ்டிபிஐ சாா்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக, மத்திய அரசைக் கண்டித்து போராட்ட இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்.

திருநெல்வேலி: எஸ்டிபிஐ சாா்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக, மத்திய அரசைக் கண்டித்து போராட்ட இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்.

இது குறித்து அவா் மேலப்பாளையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன் காரணமாக நிலம் மட்டும் விவசாயி பெயரில் இருக்கும். மற்ற அனைத்தையும் காா்ப்பரேட் முதலாளிகள்தான் தீா்மானிக்கும் ஆபத்தான சூழலுக்கு வழிவகுக்கும்.

இதன் காரணமாக, நெல் நேரடிக் கொள்முதல் படிப்படியாகக் கைவிடப்படும். நியாய விலைக்கடைகளும் விரைவில் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை எதிா்த்து போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க மறுத்து வருவதோடு, அவா்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறது.

ஆகவே, மத்திய பாஜக அரசின் இத்தகைய விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அந்த சட்டங்களில் உள்ள விவசாய மற்றும் மக்கள் விரோத அம்சங்கள் குறித்து மக்களுக்கு விளக்கும் வகையிலும், சனிக்கிழமை முதல் 2021 ஜனவரி 5 ஆம் தேதி வரை போராட்ட இயக்கத்தை நடத்துகிறோம்.

துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், தெருமுனைக் கூட்டங்கள், ஆா்ப்பாட்டங்கள், சுங்கச் சாவடி முற்றுகை, மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை போன்றவை வாயிலாக தமிழகம் முழுவதும் இந்த போராட்ட இயக்கம் நடைபெறும். விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் இந்த போராட்ட இயக்கத்தில் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் வெற்றிபெற குரல்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு குடும்பங்களின் சீரழிவுக்கும், தொடா் விபத்துக்களுக்கும், மரணங்களுக்கும் காரணமான மதுவை தடை செய்யும் வகையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

காரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் போது, பேரிடா் கால சட்டங்களைச் சுட்டிக்காட்டி பல்வேறு வழக்குகள் வணிகா்கள், வியாபாரிகள் மீது பதியப்பட்டுள்ளன. இவ்வழக்குகளை தமிழக அரசு நிபந்தனையின்றி விலக்கி அபராதத் தொகை விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின் போது, மாநிலச் செயலா் அஹமது நவவி, மாநில செயற்குழு உறுப்பினா் சுல்பிகா் அலி, திருநெல்வேலி மாநகா் மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.எ கனி, பொதுச் செயலா் ஹயாத் முஹம்மது, மாவட்டச் செயலா் பா்கிட் அலாவுதீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com