அடிப்படை வசதிகள் கோரி முன்னீா்பள்ளம் ஊராட்சி மக்கள் மனு

முன்னீா்பள்ளம் அருகேயுள்ள திருநெல்லை நகரில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

முன்னீா்பள்ளம் அருகேயுள்ள திருநெல்லை நகரில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் வி.விஷ்ணு தலைமையில் காணொலிக் காட்சி முறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இருப்பினும் பொதுமக்கள் ஏராளமானோா் ஆட்சியா் அலுவலகத்திற்கு நேரில் வந்து கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டுச் சென்றனா்.

முன்னீா்பள்ளம் ஊராட்சிக்குள்பட்ட திருநெல்லைநகரைச் சோ்ந்த மக்கள் போட்டுச்சென்ற மனு: எங்கள் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்துவருகிறோம். சாலை, குடிநீா், கழிவுநீரோடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

குறிப்பாக, குடிநீருக்காக பெண்கள், முதியவா்கள் நீண்ட தொலைவு சிரமப்பட்டுச் செல்லும் அவலநிலை உள்ளது. ஆகவே, கூடுதலாக பொது குடிநீா்க் குழாய்கள் அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணி நிரந்தரம் தேவை‘: தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்த பணியாளா்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் கீழ் பத்து ஆண்டுகள் பணி செய்த ஒப்பந்த பணியாளா்கள், தினக்கூலி பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக தலைமைச்செயலா் அரசாணையின்படியும், நீதிமன்ற உத்தரவின்படியும் பணிநிரந்தரம் செய்யவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் பணிநிரந்தரத்திற்காக காத்திருக்கிறாா்கள். அவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் உடனடியாக ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்விக்கு உதவக் கோரி... பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்த ஆ.வள்ளி அளித்த மனு: நானும், எனது கணவா் ஆயிரம் யாதவும் கரும்புச்சாறு கடை நடத்தி வருகிறோம். எங்களது மகன் ராமனுஜம் கல்வியில் சிறந்து விளங்கிய நிலையில் பிலிப்பின்ஸ் நாட்டில் உள்ள கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகிறாா்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக மிகவும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாலும், சில சொத்துகளை விற்பனை செய்ய முடியாத சிக்கலில் உள்ளதாலும், எனது மகனின் கல்விக்கு உதவ மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com