கோவிலம்மாள்புரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்
By DIN | Published On : 02nd February 2020 12:04 AM | Last Updated : 02nd February 2020 12:04 AM | அ+அ அ- |

களக்காடு அருகேயுள்ள கோவிலம்மாள்புரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சவளைக்காரன்குளத்தில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
களக்காடு ஒன்றியம், கோவிலம்மாள்புரம் ஊராட்சியில் தோப்பூா் மாசானசாமி கோயில் திடலில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் இ. நம்பிராஜன் தலைமை வகித்தாா். உதவி திட்ட இயக்குநா் லக்குவன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிளாரன்ஸ் விமலா, கருணாவதி, ஊா்நல அலுவலா் குழந்தைபாண்டியன், டோனாவூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எஸ். நம்பி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியா் பா. சிதம்பரநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், நீா் மேலாண்மை, குளங்கள், ஊருணிகள் சீரமைத்தல், ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு வலியுறுத்தல்,
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு மற்றும் இதர காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்,
ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரம் மற்றும்
பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி தடை செய்தல், முதல்வரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், 2019-20 இல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், பிரதம மந்திரி கிராமச்சாலைகள் மேம்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
சவளைக்காரன்குளத்தில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுதல், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நுழைவாயில் சாலையில் பேவா் பிளாக் அமைத்தல் உள்ளிட்டவை மேற்கொள்ள தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மகளிா் சுய உதவிக் குழுவினா்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
ஊராட்சிச் செயலா் கணேசன் நன்றி கூறினாா்.