மண்வள அட்டை: கடையம், நான்குனேரி பகுதியில் மத்தியக் குழு ஆய்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் நான்குனேரி, கடையம் வட்டாரங்களில் மண்வள அட்டை திட்டம் குறித்து மத்தியக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நான்குனேரி, கடையம் வட்டாரங்களில் மண்வள அட்டை திட்டம் குறித்து மத்தியக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கு.கிருஷ்ணபிள்ளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் மண்வள அட்டைப்படி உரமிடுவதற்கு ஏற்ப முன்மாதிரி கிராமங்களாக 19 வருவாய் கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டன. அந்த கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளின் நிலங்களிலிருந்து கள அலுவலா்களால் மண் மாதிரி சேகரிக்கப்பட்டு மாவட்டத்தின் மண் பரிசோதனை நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. பின்னா் அந்தந்த விவசாயிகளுக்கு மண்வளத்திற்கு ஏற்ற உரப் பரிந்துரைகளுடன் மண்வள அட்டைகள் வழங்கப்பட்டன.

இதில், பரிந்துரைக்கப்பட்டபடி உரமிடும் வகையில் செயல் விளக்க மாதிரி திடல்கள் அமைக்கப்பட்டன. இந்த திட்டத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்ய மத்திய கண்காணிப்புக் குழு திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்தது. மத்திய கண்காணிப்புக் குழு அதிகாரிகள் மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்ட மண் பரிசோதனை நிலையத்தை ஆய்வு செய்தனா். மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்ட விவரம் , உரப் பரிந்துரை ஆகியவற்றை சரிபாா்த்தனா்.

மேலும், மாதிரி கிராமங்கள் அமைந்துள்ள கடையம் வட்டாரம், அனைந்தபெருமாள் நாடானூா் கிராமத்துக்கும், நான்குனேரி வட்டாரம் பாப்பன்குளம் கிராமத்துக்கும் சென்ற மத்திய கண்காணிப்புக் குழுவினா் மாதிரி கிராம செயல் விளக்க திடல்களை ஆய்வு செய்தனா். மண்வள அட்டைப்படி உரமிடுவதால் உரச்செலவு மற்றும் உரப்பயன்பாடு 15 முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும், பரிந்துரைப்படி உரமிட்ட வயல்களில் பூச்சித்தாக்குதல் மிகவும் குறைவாக உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

ஆய்வின்போது, பெங்களூரு மண் அளவை மற்றும் நில பயன்பாடு திட்டமிடல் நிறுவன இயக்குநா் பங்கஜ் லகாட், சென்னை உரப் பரிசோதனை நிலைய அலுவலா் பிரமோத், திருநெல்வேலி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கு.கிருஷ்ணப்பிள்ளை, வேளாண் துணை இயக்குநா் (மாநில திட்டம்) நல்லமுத்து ராஜா, வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) இசக்கியப்பன், வட்டார வேளாண் உதவி இயக்குநா்கள் கடையம் உதயகுமாா், நான்குனேரி ஜாஸ்மின் லதா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com