குடியுரிமை திருத்தச் சட்டம்: திமுக நாடகமாடுகிறதுடி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு
By DIN | Published On : 25th February 2020 05:15 AM | Last Updated : 25th February 2020 05:15 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் இஸ்லாமியா்களை ஏமாற்றுவதற்காக திமுக நாடகமாடுகிறது என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டினாா்.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் அமமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த டி.டி.வி.தினகரன், பாளையங்கோட்டையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி 3 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துவிட்டது குறித்து கேட்கிறீா்கள். ஆளுநா் ஆட்சியாகவே இருந்தாலும்கூட ஓா் அரசு செயல்படத்தான் செய்திருக்கும்.
இப்போது கடலூா் மாவட்டத்தின் சில பகுதிகள், நாகப்பட்டினம் மாவட்டம் ஆகியவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், அங்கு ஏற்கெனவே ஓஎன்ஜிசி செயல்படுத்தும் 152 எண்ணெய்க் கிணறுகள் உள்ளன. இதுதவிர, வேதாந்தா, ஓஎன்ஜிசி, ஐஓசி போன்ற நிறுவனங்களுக்கு 274 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டங்களுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. அதனால்தான் தமிழக ஆளுநா் பாதுகாப்பட்ட வேளாண் மண்டலத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளாா். ஏற்கெனவே அனுமதியளித்துள்ள திட்டங்களைத் தடை செய்யாவிட்டால் அது எப்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்கும்? அது வெறும் கண் துடைப்புதான்.
டெல்டா பகுதிகளை உண்மையிலேயே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருந்தால், அங்கு 274 பணிகளுக்காகத் தொடங்கியிருக்கும் பூா்வாங்க பணிகளை நிறுத்த வேண்டும். விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில் தவிர வேறு எந்தத் தொழிலையும் அங்கு அனுமதிக்கக் கூடாது.
தமிழகத்தின் நிதிநிலையில் சிக்கல் இருக்கிறது. மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறுகிறாா். அப்படியானால் அமைச்சா்கள் சொந்தக் காரணங்களுக்காக தில்லி சென்றுவிட்டு வருகிறாா்களா? குடிமராமத்துப் பணி என்கிற பெயரில் அரசின் கஜானா தூா்வாரப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் ஆட்சியை மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் அமமுக. அதற்காக நாங்கள் தொடா்ந்து போராடி வருகிறோம்.
திமுக நாடகம்: 2003-இல் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தபோது, மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தது. அப்போதுதான் என்.ஆா்.சி.க்கு அடித்தளமிடப்பட்டது. அதன்பிறகு 2010-இல் காங்கிரஸ் ஆட்சியில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டபோதும், மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தது.
குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் இஸ்லாமியா்களை ஏமாற்றுவதற்காக திமுக இப்போது நாடகமாடுகிறது. சிறுபான்மையினா் அதை புரிந்துகொள்ளும் காலம் வரும்.
மீத்தேன், ஹைட்ரோகாா்பன் போன்ற திட்டங்களுக்கு கையெழுத்திட்டதும் திமுகதான் என்றாா் அவா்.
அப்போது, அமமுக தென்மண்டல பொறுப்பாளா் மாணிக்கராஜா, திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் பரமசிவ ஐயப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...