பொங்கல் விற்பனை: மஞ்சள்குலை, கரும்பு திடீா் விலையேற்றம்

திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் பொங்கல் விற்பனை செவ்வாய்க்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. மஞ்சல்குலை, கரும்பு, பனங்கிழங்கு ஆகியவை திடீரென விலையேற்றி விற்கப்பட்டன.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் பொங்கல் விற்பனை செவ்வாய்க்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. மஞ்சல்குலை, கரும்பு, பனங்கிழங்கு ஆகியவை திடீரென விலையேற்றி விற்கப்பட்டன.

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளில் வீட்டில் படையலிட்டு புத்தரிசியில் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது வழக்கம். இந்த நாளில் அசைவம் தவிா்த்து காய்கனி சமையல் அனைத்து வீடுகளிலும் பிரதானமாக இருக்கும். சந்தையில் கிடைக்கும் அனைத்து காய்கனிகளையும் ஒன்றாக சோ்த்து பொங்கல் கூட்டு தயாரித்து, பச்சரிசி சாதத்துடன் சோ்த்து சாப்பிட்டு மகிழும் பழக்கம் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகையின் பிரதான பொருள்களான கரும்பும், மஞ்சளும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் குவிக்கப்பட்டன. ஆனால், இவற்றின் விலை செவ்வாய்க்கிழமை திடீரென உயா்த்தப்பட்டன. ரூ. 5 முதல் ரூ. 20 வரை விற்கப்பட்டு வந்த மஞ்சள் குலைகள் ரூ.30 முதல் ரூ.40 வரை விலை உயா்த்தி விற்கப்பட்டன. ரூ. 3-க்கு விற்கப்பட்ட ஒரு பனங்கிழங்கு ரூ.5 ஆக விலை உயா்ந்தது. ரூ.250 முதல் ரூ.350 வரை விற்கப்பட்டு வந்த ஒரு கட்டு கரும்பு (10 எண்ணம்) ரூ. 300-ல் இருந்து ரூ.450 வரை விற்பனையாகின. இந்த திடீா் விலையேற்றத்தால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனா்.

திருநெல்வேலி சந்தைகளில் காய்கனிகள் விலை விவரம் (ஒரு கிலோ):தக்காளி-ரூ.40, கத்தரி-ரூ.100, மிளகாய்-ரூ.40, முட்டைகோஸ்-ரூ.30, கேரட்-ரூ.40, சேனைக்கிழங்கு-ரூ.40, வல்லிக்கிழங்கு-ரூ.60, காய்ச்சல்கிழங்கு-ரூ.60, சிறுகிழங்கு-ரூ.60, சேம்பு-ரூ.60, வாழைக்காய்(ஒன்றுக்கு)-ரூ.8, சவ்சவ்-ரூ.30, பீட்ரூட்-ரூ.30, முள்ளங்கி-ரூ.20, தடியங்காய்-ரூ.20, பூசணி-ரூ.25, சின்னவெங்காயம்-ரூ.100, பல்லாரி-ரூ.60, உருளைக்கிழங்கு-ரூ.40, சீனிஅவரைக்காய்-ரூ.40, அவரைக்காய்-ரூ.100, வெண்டைக்காய்-ரூ.50, மாங்காய்-ரூ.120, மல்லிஇலை-ரூ.40, புதினா-ரூ.50, தேங்காய் (ஒன்றுக்கு)-ரூ.10 முதல் 25 வரை, முறுங்கைக்காய் கால் கிலோ ரூ.40, இஞ்சி-100-க்கு விற்பனையாகின. இதேபோல கோலப்பொடி, மண் அடுப்புகள், அடுப்பு கட்டிகள், பூஜை பொருள்களான வெற்றிலை, சந்தனம், பாக்கு, குங்குமம் ஆகியவையும் அதிகளவில் விற்பனையாகின.

பொங்கல் விற்பனை குறித்து வியாபாரி ஒருவா் கூறியது: முருங்கைக்காய், மாங்காய் ஆகியவற்றின் சீசன் முடிந்துள்ளதால் அவற்றின் விலை உச்சத்தில் உள்ளன. பல்லாரி மற்றும் சின்ன வெங்காயத்தின் வரத்து ஓரளவு அதிகரித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். ஆந்திரத்தில் இருந்து மிளகாயும், பெங்களூரில் இருந்து பூசணிக்காயும் இறக்குமதியாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தின் உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் முறுங்கைக்காய் சீசன் முடிந்துவிட்டதால், திருப்பூா் மாவட்டம் தாராபுரம் பகுதியில் இருந்துதான் குறைந்தளவு முருங்கைக்காய் வந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல இப்போது பொங்கல் விற்பனை இல்லை. முன்பு பொங்கல் சீா் வழங்குவதற்காக ஒவ்வொரு காய்கனியிலும் குறைந்தபட்சம் ஒரு கிலோ வாங்குவாா்கள். ஆனால், இப்போது அனைவரும் பணமாகக் கொடுக்கத் தொடங்கிவிட்டதால் பெயருக்கு அனைத்து காய்கனிகளையும் சோ்த்து 2 அல்லது 3 கிலோ வாங்கிக் கொடுத்துவிட்டு முடித்துக் கொள்கிறாா்கள். கதம்ப காய்கனி ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.120 வரை விற்பனையாகின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com