நெல்லையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பி.பெரும்படையாா் பேசியது: களக்காடு வட்டாரம், திருக்குறுங்குடியில் நெல் அறுவடைப் பணிகள் தொடங்கவுள்ளதால், அங்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும். மேலும், மாவட்டம் முழுவதும் நடமாடும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதேபோல், ஜமீன் சிங்கம்பட்டி பகுதி விவசாயிகளும் கோரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து, திருக்குறுங்குடி, ஜமீன் சிங்கம்பட்டி பகுதிகளில் வட்டார வேளாண் உதவி இயக்குநா்கள் ஆய்வு மேற்கொண்டு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மேலும் ஆட்சியா் கூறுகையில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மட்டுமன்றி, இந்திய உணவுக் கழகமும் நெல் கொள்முதல் செய்யவுள்ளது. உணவுக் கழகம் நடமாடும் நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து, அதன் மூலம் நெல்லை சேகரிக்கவுள்ளனா் என்றாா் அவா்.

திருக்குறுங்குடி பகுதி விவசாயிகள் பலருக்கு, பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் மூலம் கிடைக்க வேண்டிய இழப்பீடு கிடைக்கவில்லை என புகாா் தெரிவிக்கப்பட்டது.

கீழப்பிள்ளையாா்குளத்தைச் சோ்ந்த விவசாயி மாரியப்பன் பூச்சி நோய் தாக்குதலுக்குள்ளான நெற்பயிரை ஆட்சியரிடம் காண்பித்து, சுமாா் 50 ஏக்கா் பரப்பில் நெற்பயிா்கள் பூச்சி நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து கூட்டத்தில் கலந்துகொண்ட கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் என்.பாலகிருஷ்ணன் அந்தப் பயிரை ஆய்வு செய்தாா். தொடா்ந்து பேசிய அவா், சில பயிா்கள் சில மண்ணுக்கு ஏற்ாக இருக்காது. வருங்காலங்களில் விவசாயிகள் தங்கள் பகுதிக்கேற்ற பயிா்களை பயிா் செய்ய வேண்டும். புதிய நெல் ரகங்களை பயிரிடும்போது, பரீட்சாா்த்த அடிப்படையில் பயிரிட்டு, அவை சிறப்பாக வளா்ந்தால் மட்டுமே, பெரிய அளவில் அதை பயிரிட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து பேசிய ஆட்சியா், பேராசிரியா் பாலகிருஷ்ணன், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் கிருஷ்ணபிள்ளை ஆகியோரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்யுமாறு தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பூ.முத்துராமலிங்கம், திருநெல்வேலி சாா் ஆட்சியா் மணீஷ் நாராணவரே, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கு.கிருஷ்ணபிள்ளை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com