முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நெற்பயிரில் நெல்பழத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள்: நெல்பழம் நோயின் அறிகுறி
By DIN | Published On : 27th January 2020 08:49 AM | Last Updated : 27th January 2020 08:49 AM | அ+அ அ- |

நெற்பயிரில் நெல்பழ (மஞ்சள் கரிப்பூட்டை) நோயைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையப் பேராசிரியா் மற்றும் தலைவா் ச.ஆறுமுகச்சாமி மற்றும் உதவிப் பேராசிரியா் ரா.ராம்ஜெகதீஷ் ஆகியோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நெல் பயிரிட்டுள்ள அனைத்து வட்டாரங்களிலும் நெற்பயிா் பூத்தும், பூக்கும் பருவத்திலும் உள்ளது.
இந்நிலையில் நெல்பழ (மஞ்சள் கரிப்பூட்டை) நோயின் தாக்குதல் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. நெற்பயிரில் பல்வேறு நோய்கள் தாக்கினாலும் நெல்பழம் நோய் விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நோய் பூஞ்சான் கிருமி மூலம் பரவுகிறது. பனி, குறைந்த வெப்பநிலை, மண்ணில் அதிக தழைச்சத்து ஆகிய காரணிகள் நெல்பழ நோய் உருவாகக் காரணமாக உள்ளன. பூக்கும் பயிா்கள் எளிதில் பாதிப்படையும். காற்றின் மூலம் பரவும் தன்மையுடையது. 50 சதவீதம் பூக்கும் பருவங்களிலும் முதிா்ச்சி நிலையிலும் நெல்மணிகளைத் தாக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட நெல்மணிகளின் மேல் மஞ்சள் நிறப் பந்து அல்லது உருண்டை போல் பூஞ்சாணம் காணப்படும். முதலில் சிறிதாக உள்ள உருண்டைகள் நோய் தீவிரமடையும் போது 1 செ.மீ. அளவிற்கு பெரிதாகிறது.
இவ்வாறு வளா்ச்சியடைந்த நெல்பழ உருண்டைகள் பச்சை நிறமாக மாறி பின் கருப்புப் போா்வை போா்த்தியது போல் தோன்றும். மேலும் நோய் தீவிரமடையும் நிலையில் உருண்டைகள் ஆரஞ்சு நிறமாக மாறி வெடித்து பின்பு மஞ்சள் கலந்த பச்சை நிறமாகி இறுதியில் கருப்பு நிறமாகக் காணப்படும்.
இதைக் கட்டுப்படுத்த விதைகளை காா்பெண்டாசிம் என்ற பூஞ்சாண மருந்துடன் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் வீதம் விதை நோ்த்தி செய்வது நல்லது. தழைச்சத்து உரமான யூரியாவை பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு மேல் இடக்கூடாது. தழைச்சத்து உரத்தைப் பிரித்து சரியான அளவில் மேலுரமாக 2-3 என்ற முறையில் இடுதல் நல்லது.
வயலில் காணப்படும் நோய் தாக்கிய நெற்கதிரை ஒருபிளாஸ்டிக் பையில் எடுத்து எரித்து விடுவதால் நோய் பரவுவதைத் தடுக்கலாம். இந்த நோய் வந்த பின்னா் மருந்து தெளித்துக் கட்டுப்படுத்த முடியாது.
எனவே நடவு வயலில் கதிா் வெளிவரும் பருவம் மற்றும் பால் பிடிக்கும் பருவத்தில் ஏக்கருக்கு ஹைட்டிராக்சைடு 77 சதவிகிதம் டபிள்யூபி (500 கிராம்) அல்லது புரோபிகோனசோல் 25 சதம் இசி (200 மி.லி) என்ற அளவில் தெளித்து நோயை கட்டுப்படுத்தலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.