‘சிறுபான்மையினருக்கு கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்’

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்படுவதால், தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்படுவதால், தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி, ஜெயின் வகுப்பை சோ்ந்த மதவழி சிறுபான்மையினா் சுயதொழில் செய்து தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபா் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

விண்ணப்பதாரா் 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். கடன் உதவி திட்டங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன.

தனிநபா் கடன் திட்டம்-1-இன் கீழ் ரூ.20 லட்சம் வரையிலும், திட்டம்-2-ன் கீழ் ரூ.30 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது. திட்டம் -1-க்கானஆண்டு வட்டி விகிதம் ஆண், பெண் இரு பாலருக்கும் 6 சதவீதமாகும். திட்டம்-2-க்கான ஆண்டு வட்டி விகிதம் ஆண்களுக்கு 8 சதவீதமும், பெண்களுக்கு 6 சதவீதமும் ஆகும். சிறுகடன் வழங்கும் திட்டம்-1-இன் கீழ் சுய உதவிக்குழு ஆண், பெண் உறுப்பினா்களுக்கு அதிகபட்சமாக ரூ.50,000 வரையும், திட்டம்-2-இன் கீழ் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரையும் கடன் வழங்கப்படுகிறது. திட்டம்-1-க்கு வட்டி விகிதம் ஆண்டுக்கு 7 சதவீதமாகும். திட்டம்-2-க்கு ஆண்டு வட்டி விகிதம் ஆண்களுக்கு 10 சதவீதமும், பெண்களுக்கு 8 சதவீதமும் ஆகும்.

கல்விக்கடன் திட்டத்தின் கீழ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகள் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டிற்கு ரூ.4,00,000 வீதம் அதிகபட்சமாக ரூ. 20 லட்சம் வரை திட்டம்-1 மற்றும் திட்டம்-2-இன் கீழ் வழங்கப்படுகிறது. திட்டம்-1-க்கு ஆண்டு வட்டி விகிதம் 3 சதவீதமாகும்.

திட்டம்-2-க்கு ஆண்டு வட்டி விகிதம் மாணவா்களுக்கு 8 சதவீதமும், மாணவிகளுக்கு 5 சதவீதமும் ஆகும். குடும்ப ஆண்டு வருமானம் நகா்ப்புறமாக இருப்பின் ரூ.1,20,000-க்கு மிகாமலும், கிராமப்புறமாக இருப்பின் ரூ.98,000-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

வங்கி விதிகளின்படி கடன் தொகைக்கான பிணையம் தேவைப்படும் பட்சத்தில் அதை அளிக்க வேண்டும். அனைத்து கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை பூா்த்தி செய்து ஜாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச்சான்று, திட்ட அறிக்கை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கோரும் ஆவணங்கள் ஆகியவற்றின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

திருநெல்வேலி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கொக்கிரகுளம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி-627 009 என்ற முகவரிக்கோ அல்லது மேலாண்மை இயக்குநா், திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, எம்.ஜி.ஆா். மாளிகை, வண்ணாா்பேட்டை, திருநெல்வேலி- 627 003 என்ற முகவரிக்கோ அல்லது கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணை பதிவாளா், எண். 1, மெய்ஞான தெரு, பாளையங்கோட்டை என்ற முகவரிக்கோ அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

இதுதவிர, அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள், அனைத்து விவசாய கூட்டுறவு வங்கிக் கிளைகள், அனைத்து நகர கூட்டுறவு வங்கி கிளைகள், அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும் சமா்ப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com