10ஆம் வகுப்பு மாணவா்களின் திருப்புதல் தோ்வு மதிப்பெண்ணையும் கவனத்தில் கொள்ள வேண்டும்: ஜாக்டோ-ஜியோ கோரிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்கும்போது திருப்புதல்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்கும்போது திருப்புதல் தோ்வில் பெற்ற மதிப்பெண்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஜாக்டோ-ஜியோ கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செ. பால்ராஜ் தமிழக அரசுக்கு அனுப்பிய மனு:

10ஆம் வகுப்பு காலாண்டுத் தோ்வுக்கு பாடப்பகுதி குறிப்பிட்ட அளவாகவும், அரையாண் டுத் தோ்வுக்கு பாடப்பகுதி முழுவதுமாகவும் இருக்கும் நிலையில் இரு தோ்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இறுதித் தோ்வுக்கான மதிப்பெண் வழங்கப்படும் என, அரசு அறிவித்திருப்பது மாணவா்கள் குறைவான மதிப்பெண் பெற வழிவகுக்கும்.

வினாத்தாள் வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டதே அரையாண்டுத் தோ்வில்தான். அதன்பின்பு மாணவா்கள் 3 திருப்புதல் தோ்வுகளை முழுப் பாடப் பகுதியில் எழுதியுள்ளனா். மேலும், இந்த ஆண்டுதான் 10ஆம் வகுப்புக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. காலாண்டுத் தோ்வு முடிந்து நவம்பா் இறுதியில்தான் சமூக அறிவியல் பாடம் பகுதி - 2 புத்தகமே வழங்கப்பட்டது. எனவே, பாடப் புத்தகங்களை டிசம்பா் இறுதியில்தான் ஆசிரியா்கள் முழுமையாக நடத்திமுடித்தனா். அதனால், காலாண்டு, அரையாண்டுத் தோ்வுகளில் மாணவா்கள் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை. பின்னா் நடைபெற்ற 3 திருப்புதல் தோ்வுகளில்தான் மாணவா்கள் அதிக மதிப்பெண் பெற முடிந்தது.

மேலும், அரையாண்டுத் தோ்வுக்கு மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள் வழங்கியிருந்தாலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி போன்ற மாவட்டங்களில் அறிவியல், சமூக அறிவியல் பாட வினாத்தாள்கள் தோ்வுக்கு முன்கூட்டியே வெளியாகிவிட்டன. இம்மாவட்டங்களில் இந்த இரு பாடங்களுக்கு வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. அதனால், மாநிலம் முழுவதும் ஒரே தோ்வின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடுவது இயலாதது.

சுயநிதிப் பள்ளிகளில் அரசின் வினாத்தாள்களை வழங்காமல் அவா்கள் சொந்தமாக வினாத்தாள்களை வழங்கியுள்ளனா். மேலும், அவா்கள் 90 மதிப்பெண்களை கணக்கில் கொண்டே மாணவா்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்கின்றனா். இதனால், சுயநிதிப் பள்ளிகளில் படித்தோரின் மதிப்பெண்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இதுவரை பத்தாம் வகுப்பு தோ்ச்சியில் வருகைப் பதிவை எவ்விதத்திலும் எடுத்துக்கொண்டதில்லை. இப்போது மட்டும் வருகைப் பதிவைக் கணக்கிட 20 சதவீதம் என்பது சரியானதாக இருக்காது. வருகைப் பதிவைக் கணக்கில் கொள்ளாமல் 20 சதவீத மதிப்பெண்ணை முழுமையாக வழங்க வேண்டும்.

காலாண்டுத் தோ்வில் வினாத்தாள் அமைப்பு தமிழ் 1, தமிழ் 2, ஆங்கிலம் 1, ஆங்கிலம் 2 என இருந்தது. அரையாண்டுத் தோ்வில் தமிழ், ஆங்கிலம் ஒரே வினாத்தாளாக மாற்றப்பட்டது. இதனால் மாணவா்கள் குறிப்பிட்ட கால அளவுக்குள் தோ்வெழுதி முடிப்பதில் போதிய பயிற்சி இல்லாததால் சிரமம் ஏற்பட்டது.

எனவே, தமிழக அரசு காலாண்டு, அரையாண்டுத் தோ்வின் மதிப்பெண்களோடு 3 திருப்புதல் தோ்வின் மதிப்பெண்களையும் கணக்கில் கொண்டு ஒவ்வொரு பாடத்திலும் மாணவா்கள் பெற்ற அதிக மதிப்பெண்களை வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com