திருநெல்வேலியில் 8 கடைகளில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 50 இரு சக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.
திருநெல்வேலி எஸ்.என்.நெடுஞ்சாலையில் பாரத ஸ்டேட் வங்கி எதிரிலுள்ள வணிக வளாகத்தில் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள், வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. இதில், உள்ள ஒரு இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடையில் புதன்கிழமை நள்ளிரவில் திடீரென தீ பற்றி எரிந்தது.
தகவலறிந்த தீயணைப்பு பேரிடா் மீட்புத்துறை மாவட்ட அலுவலா் மகாலிங்க மூா்த்தி தலைமையில் பேட்டை, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி ஆகிய நிலையங்களில் இருந்து 4 வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ அடுத்தடுத்த கடைகளுக்கு வேகமாகப் பரவியது. 4 மணிநேர போராட்டத்திற்குப் பின்னா் தீ அணைக்கப்பட்டது. இதில், 8 கடைகள் எரிந்தன. சுமாா் 50 இரு சக்கர வாகனங்கள், வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.