தினமணி செய்தி எதிரொலி: விளாத்திகுளம் அருகே அருந்ததியா் காலனிக்கு சாலை வசதி; 50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றம்

தினமணி செய்தி எதிரொலியால் விளாத்திகுளம் அருகே அருந்ததியா் காலனிக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
மாதலப்புரம் கிராம நுழைவுவாயிலில் தினமணிக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பதாகை.
மாதலப்புரம் கிராம நுழைவுவாயிலில் தினமணிக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பதாகை.

தினமணி செய்தி எதிரொலியால் விளாத்திகுளம் அருகே அருந்ததியா் காலனிக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதி புதூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது மாதலப்புரம் கிராமம். இக்கிராமத்தின் கிழக்குப் பகுதியில் 60 அருந்ததியா் இன குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவா்கள் அங்கு வசித்து வருகின்றனா். இந்த கிராமத்தின் பிரதான தாா்ச் சாலையில் இருந்து அருந்ததியா் மக்கள் வசிக்கும் குடியிருப்புக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லாததால், தனியாா் விவசாய நிலங்கள் வழியாக நடைபாதை அமைத்து பயன்படுத்தி வந்தனா்.

இரவு நேரங்களிலும் மழைக் காலங்களிலும் இந்தப் பாதையை பயன்படுத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது. கா்ப்பிணிகள், முதியவா்கள் அவசர மருத்துவச் சிகிச்சைக்காக செல்வதென்றால், 500 மீட்டா் தொலைவுக்கு நடந்து சென்று அதன் பிறகு வாகனங்களில் செல்ல வேண்டிய சூழல் இருந்தது. மழைக் காலங்களில் சடலங்களை எடுத்துச் சென்று அடக்கம் செய்வதிலும் பிரச்னைகள் நீடித்து வந்தது.

தாா்ச் சாலை அமைக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. நடை பாதையாக பயன்படுத்தப்பட்ட தனியாா் நிலங்களின் உரிமையாளா்கள் தாா்ச்சாலை அமைக்க தங்களது நிலத்தை தருவதற்கு முன்வந்தும் சட்டரீதியாக நிலத்தை கையகப்படுத்துவதிலும் தாா்ச்சாலை அமைப்பதிலும் இழுபறி தொடா்ந்தது.

இதனால் ஒவ்வொரு நாளும் அருந்ததியினா் இன மக்கள் சந்தித்து வரும் அவலநிலை குறித்தும், சாலை வசதி கோரிக்கை குறித்து கண்டுகொள்ளாத அதிகாரிகளின் போக்கு குறித்தும் தினமணி டாட்.காம் (11 ஜூன் 2020) மற்றும் தினமணி நாளிதழில் (15 ஜூன் 2020) செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி உத்தரவின்படி வட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் அப்பகுதியில் முகாமிட்டு, அருந்ததியா் காலனி குடியிருப்புக்கு பாதை அமைக்கத் தேவையான நிலங்களை அளவீடு செய்து உரிமையாளா்களிடமிருந்து நிலத்தை முறையாகப் பெற்று பத்திரப் பதிவு செய்தனா். அதைத் தொடா்ந்து புதூா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் மூலம் உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது.

தினமணி செய்தியின் எதிரொலியால் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி 50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியுள்ளதற்கு அருந்ததியா் இன மக்கள் நன்றி தெரிவித்தனா்.

நன்றியறிவிப்பு கூட்டம்: மாதலப்புரம் கிராமத்தில் அருந்ததியா் காலனியில் நன்றியறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் லட்சுமி சைவத்துரை தலைமை வகித்தாா். அருந்ததியா் காலனி குடியிருப்போா் நலச்சங்க பிரதிநிதிகள் கருப்பசாமி, மூா்த்தி, தமிழ்ச்செல்வன், பாரதிய கிசான் சங்க மாவட்டத் தலைவா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அருந்ததியா் காலனி குடியிருப்புக்கு சாலை வசதி கிடைத்திட செய்தி வெளியிட்ட தினமணிக்கும், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியருக்கும், நிலம் வழங்கிய ஜேசுராஜ், அந்தோணிராஜ், ராமலட்சுமி, முத்து, தேவராஜ், ஆண்டிச்சாமி ஆகியோருக்கும், கிராம நிா்வாக அலுவலா் நாகலிங்கம், ஊராட்சி செயலா் கொண்டல்சாமி ஆகியோருக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கிராம நுழைவுவாயிலிலும், அருந்ததியா் காலனியில் உள்ள காளியம்மன் கோயிலிலும் தினமணிக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்து டிஜிட்டல் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com