நெல்லையில் கூலித்தொழிலாளி கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை
By DIN | Published On : 04th March 2020 09:32 PM | Last Updated : 04th March 2020 09:32 PM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலியை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியை அடுத்த முன்னீர்பள்ளம் அருகேயுள்ள கீழ ஓமநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் எடிசன் சுவிசேஷமுத்து (47). இவர் கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர்கள் இருவரும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது, தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், எடிசன் அரிவாளால் வெட்டியதில் பாலசுப்பிரமணியனின் கையில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து எடிசன், பாலசுப்பிரமணியன் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 14.4.2013 அன்று பாலசுப்பிரமணியன் மகன் பிச்சுமணி (30), அவருடைய நண்பர் இசக்கிமுத்து (40) ஆகியோர் எடிசனை மது அருந்துவதற்காக பொன்னாக்குடிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மது அருந்திக் கொண்டிருந்தபோது, தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பிச்சுமணியும், இசக்கிமுத்துவும் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து எடிசனை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் எடிசன் உயிரிழந்தார்.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பிச்சுமணி, இசக்கிமுத்து ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு நீதிபதி (பொறுப்பு) விஜயகுமார் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பிச்சுமணி மற்றும் இசக்கிமுத்து ஆகியோருக்கு நீதிபதி ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.