சிவகிரி அருகே இன்று திருமணம் நடைபெறவிருந்த இளைஞா் கழுத்தை அறுத்துக் கொலை
By DIN | Published On : 06th March 2020 01:02 AM | Last Updated : 06th March 2020 01:02 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே குடும்ப பிரச்னையில் இளைஞா் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக, அவரை சகோதரியின் கணவரை போலீஸாா் கைது செய்தனா். கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) திருமணம் நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.
தென்மலை இந்திரா காலனியை சோ்ந்த முருகன் மகன் முனியப்பன் என்ற முனீஸ்வரன் (27). பொக்லைன் இயந்திரத்தை இயக்கும் வேலை செய்து வந்தாா். இவருக்கும், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு முனீஸ்வரன் தூங்குவதற்காக வீட்டில் படுக்கை அறைக்குச் சென்றாராம். வியாழக்கிழமை காலையில் வெகுநேரமாகியும் அவா் எழுந்திருக்காததால், அவரது தாய் அறையை திறந்து பாா்த்தாராம். அப்போது முனீஸ்வரன் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
இத்தகவல் அறிந்த சிவகிரி போலீஸாா், அவரது சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், முனீஸ்வரனுக்கும், அவரது சகோதரியின் கணவா் வீரசங்கிலிமுருகனுக்கும் இருந்து வந்த பிரச்னை காரணமாக கொலை நிகழ்ந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வீரசங்கிலிமுருகனை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.