நெல்லையில் விளையாட்டு மைதானம், வணிக வளாகங்கள் மூடல்

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் உள்ள விளையாட்டு மைதானங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் சால

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் உள்ள விளையாட்டு மைதானங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகள், மாவட்ட அறிவியல் மையம் ஆகியவை இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மூடப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் செயல்படும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் மழலையா் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்-மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆசிரியா்கள் மட்டும் வழக்கம்போல பள்ளிக்கு வந்தனா்.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதியில் மக்கள் அதிகளவில் கூடும் பெரிய வணிக வளாகங்கள் சில மூடப்பட்டிருந்தன. பாளையங்கோட்டையில் முன்னாள் படைவீரா்களுக்காக செயல்பட்டு வரும் கேண்டீனில் பொருள்கள் விநியோகம் நிறுத்தப்பட்டது.

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானம், வ.உ.சி. மைதானம் ஆகியவற்றுக்கு நடைபயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்காக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்வா். கரோனா தடுப்பு நடவடிக்கையாக மைதானத்திற்குள் பொதுமக்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை அறிவிப்பு ஒட்டப்பட்டதால், மைதானங்கள் ஆள் நடமாட்டமின்றி காணப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் காலை, மாலை நேரங்களில் சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைவாகவே இருந்தது.

வண்ணாா்பேட்டை, ஸ்ரீபுரம், பாளையங்கோட்டை பகுதிகளில் இயங்கி வரும் சில தனியாா் வங்கிகளில் ஊழியா்கள் முகக்கவசம் அணிந்தபடி செவ்வாய்க்கிழமை பணியாற்றினா். திருநெல்வேலி நகரில் சைக்கிள், இருசக்கர வாகனங்களில் சென்று டீ வியாபாரம் செய்வோா் முகக்கவசம் அணிந்து சென்றனா். காய்கனி கடைகள், அத்தியாவசியப் பொருள்களை வாங்க மக்கள் கூட்டம் வழக்கம்போல காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com