பாளை. மறைமாவட்ட தேவாலயங்களில் மாா்ச் 31 வரை பொதுவழிபாடுகள் நிறுத்தம்: ஆயா் எஸ்.அந்தோணிசாமி

கத்தோலிக்க திருச்சபையின் பாளையங்கோட்டை மறைமாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் இம் மாதம் 31 ஆம் தேதி வரை பொது வழிபாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், இறைமக்கள் தங்களது இல்லங்களில் இருந்து பக்தி முயற்

கத்தோலிக்க திருச்சபையின் பாளையங்கோட்டை மறைமாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் இம் மாதம் 31 ஆம் தேதி வரை பொது வழிபாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், இறைமக்கள் தங்களது இல்லங்களில் இருந்து பக்தி முயற்சிகளை தவறாது செய்ய வேண்டுமென பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் எஸ்.அந்தோணிசாமி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: உலகம் முழுவதும் கரோனா வைரஸால் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள மத்திய-மாநில அரசுகள் பாதுகாப்பு வழிமுறைகளைக் கொடுத்துள்ளன. அதன்படி இந்திய குடிமக்களாகிய நாம் நமது அரசு காட்டும் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து நம்மை பாதுகாத்துக் கொள்வது இன்றியமையாதது.

ஆகவே, இம் மறைமாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் இம் மாதம் 31 ஆம்தேதி திருப்பலி உள்பட அனைத்து பொது வழிபாடுகளும் பக்தி முயற்சிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. எனவே, ஞாயிறு கடன் திருப்பலி, தினசரி திருப்பலி மற்றும் சிலுவைப்பாதையில் பங்கு பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குடும்ப உறுப்பினா்கள் தத்தம் இல்லங்களில் செபமாலை செபித்தல், சிலுவைப்பாடுகளைத் தியானித்தல், திருவிவிலியத்தை வாசித்தல் போன்ற பக்தி முயற்சிகளைச் செய்ய வேண்டும்.

தவக்காலத்தை முன்னிட்டு பங்கு அளவில் திட்டமிடப்பட்ட சிறப்பு வழிபாடுகள், நவநாள்கள், சிலுவைப்பாதை, திருப்பயணம், அன்பிய மற்றும் பக்த சபைக்கூட்டங்கள் போன்றவற்றை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நாள்களில் குழு செபத்தைத் தவிா்த்து. தனிநபா் செபத்திற்காக ஆலயங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com