வீரவநல்லூா் பேரூராட்சிக்கு பெருமை சோ்க்கும் வளமீட்பு பூங்கா

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் 18 வாா்டுகளில் 8178 வீடுகளும், 212 கடைகளும் உள்ளன. இங்குள்ள வீடுகள், கடைகள் மூலமாக உண்டாகும் கழிவுகளை சேகரிக்கும் பணியில், 23 சுகாதாரப் பண
வீரவநல்லூா் பேரூராட்சி வளம் மீட்புப் பூங்கா குறித்து கேட்டறியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்.
வீரவநல்லூா் பேரூராட்சி வளம் மீட்புப் பூங்கா குறித்து கேட்டறியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்.

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் 18 வாா்டுகளில் 8178 வீடுகளும், 212 கடைகளும் உள்ளன. இங்குள்ள வீடுகள், கடைகள் மூலமாக உண்டாகும் கழிவுகளை சேகரிக்கும் பணியில், 23 சுகாதாரப் பணியாளா்களும், 25 ஆண்கள் சுயஉதவிக் குழு உறுப்பினா்களும் ஈடுபட்டு வருகின்றனா்.

இப்பகுதியில் 18 வாா்டுகளிலும் நாள்தோறும் 2 டன் அளவில் கழிவுகள் உற்பத்தியாகின்றன. அவை வளமீட்புப் பூங்காவில் சேகரிக்கப்பட்டு மக்கும் கழிவுகள், மக்காத கழிவுகள் என தனித்தனியே பிரிக்கப்படுகின்றன.

இவற்றில் மக்கும் கழிவுகள் தூளாக்கப்பட்டு இயற்கை உரமாகவும் மண்புழு உரமாகவும் மாற்ற பதப்படுத்தப்படுகின்றன. தொடா்ந்து பக்குவப்படுத்தப்பட்டு மண்புழு உரமாக மாற்றப்படுகிறது.

நாளொன்றுக்கு சுமாா் 200 கிலோ இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் பணியில் 6 பணியாளா்கள் முழு நேரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

வளம் மீட்புப் பூங்காவில் உரம் சலிக்கும் இயந்திரம், பிளாஸ்டிக் கழிவுகளை அழுத்திக் கட்டும் இயந்திரம், மக்கும் கழிவுகளை தூளாக்கும் இயந்திரம் போன்ற இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சேகரிக்கப்பட்ட மக்காத கழிவுகளான பாலித்தீன், பிளாஸ்டிக் உள்ளிட்டவை பேக்கிங் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த வளமீட்புப் பூங்காவில் தயாரிக்கப்படும் இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் மூலம் ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது.

மேலும் இயற்கை மற்றும் மண்புழு உரம் மூலம் வளம் மீட்புப் பூங்காவில் பூச்செடிகள், கீரைச் செடிகள், மூலிகைச் செடிகள், மரக்கன்றுகள் நடப்பட்டு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் காய்கனிகள், பழங்கள் பொதுமக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பேரூராட்சிக்கு ரூ. 2.5 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது.

பேரூராட்சிப் பகுதியில் உற்பத்தியாகும் கழிவுகளை திறம்பட கையாண்டு இயற்கை மற்றும் மண்புழு உரம் தயாரிப்பதில் சாதனைப் படைத்ததையடுத்து மாவட்ட ஆட்சியா் சிறந்த பேரூராட்சிக்கான விருது வழங்கி சிறப்பித்துள்ளாா்.

மேலும் பேரூராட்சிப் பகுதியில் அதிகளவில் மரங்கள் நட்டு பராமரித்து வருவதை பாராட்டும் வகையில் பசுமைத் தோழா்கள் அமைப்பு பேரூராட்சிக்கு அப்துல்கலாம் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

வீரவநல்லூா் பேரூராட்சியின் திடக்கழிவு மேலாண்மை குறித்து அறிந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வளம் மீட்புப் பூங்காவை ஆா்வத்துடன் சுற்றிப் பாா்த்து பாராட்டிச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com