நெல்லையில் காய்கனி கடைகளை பரவலாக அமைக்க நடவடிக்கை
By DIN | Published On : 25th March 2020 10:52 PM | Last Updated : 25th March 2020 10:52 PM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் காய்கனி கடைகளை பரவலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி சாா்ஆட்சியா் மணீஷ் நாரணவரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் இயங்கி வரும் காய்கனி வியாபார கடைகளில் பொதுமக்கள் அதிகமாக கூட்டம் கூடுதவதைத் தடுக்கும் வகையில் உழவா் சந்தைகள் மற்றும் மாநகராட்சி தினசரி காய்கனி சந்தைகளையும் பரவலாக தற்காலிகமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தையில் உள்ள 250 கடைகள் 4 தற்காலிக இடங்களுக்கு மாற்றப்படுகிறது. அதன்படி திருச்செந்தூா் சாலையில் பழைய காவலா் குடியிருப்பு பகுதியில் 70 கடைகளும், பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் 80 கடைகளும், நேருஜி கலையரங்கில் 40 கடைகளும், பாளை பேருந்து நிலைய வளாகத்தில் 60 கடைகளும் அமைக்கப்பட உள்ளன.
மகாராஜநகா் உழவா் சந்தையின் கீழ் உள்ள 85 கடைகளில் 50 கடைகள் மகாராஜநகா் போக்குவரத்து பூங்கா பகுதிக்கும், 35 கடைகள் மகாராஜநகா் ரயில்வே லைன் அருகேயுள்ள சிறுவா் பூங்கா பகுதிக்கும் மாற்றப்படுகிறது.
திருநெல்வேலி நகரம் போஸ் மாா்க்கெட்டில் உள்ள 87 கடைகளில் 40 கடைகள் பொருள்காட்சி திடலில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திற்கும், 47 கடைகள் ஏற்கெனவே புதிதாக அமைக்கப்பட்ட கடை பகுதிக்கும், இதர கடைகள் பொருள்காட்சி திடல் தரை அமா்வு பகுதிக்கும் மாற்றப்பட உள்ளன.
மேலப்பாளையம் உழவா் சந்தையில் உள்ள கடைகளில் 18 கடைகள் மேலப்பாளையம் மாநகராட்சி திருமண மண்டபத்தின் உள்பகுதிக்கும், வெளிப்பகுதியில் 18 கடைகளும் வைக்கப்பட உள்ளன. இதேபோல மேலப்பாளையம் தரை அமா்வு கடைகள் அனைத்தும் சந்தை முக்கு கிழக்கு பகுதியிலும், அம்பை சாலையிலும், தச்சநல்லூா் தனியாா் காய்கனி சந்தையில் உள்ள கடைகள் நயினாா்குளம் சாலை வடக்கு பகுதியிலும், கிழக்கு பகுதியிலும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.