அத்தியாவசியப் பொருள்கள் வீடு தேடி வர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வெளியில் வருவதைத் தடுக்க அத்தியாவசியப் பொருள்கள் வீடு தேடி வர

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வெளியில் வருவதைத் தடுக்க அத்தியாவசியப் பொருள்கள் வீடு தேடி வர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக விலகலை கடைப்பிடித்து, கரோனா வைரஸ் பரவும் சங்கிலியை உடைப்பதற்காகவே இந்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கனிகள், மளிகைப் பொருள்கள், இறைச்சி உள்ளிட்டவை தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவின் முதல் நாளான புதன்கிழமை நண்பகல் வரையிலும், மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் காா்களில் பயணிப்போரின் எண்ணிக்கை கணிசமாக இருந்தது. மருந்துவமனை, மருந்தகம், மளிகைக் கடை, சந்தை உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதாக பொதுமக்கள் கூறிவிட்டுச் சென்றனா். ஆனால், அவா்களில் பலா் பொய்யான காரணங்களை கூறிச் செல்வதை கண்டுபிடித்த போலீஸாா், பாளையங்கோட்டையில் திருவனந்தபுரம் செல்லும் சாலையை அடைத்து புதிய பேருந்து நிலையம் வழியாக வண்ணாா்பேட்டை வருமாறு வாகன ஓட்டிகளை சுற்றி வர வைத்தனா். இதேபோல், வண்ணாா்பேட்டையில் போலீஸாா் வாகனங்களை திடீரென நிறுத்தினா். அப்போது, அந்த வழியாக குழந்தைகள் உள்பட குடும்பத்தோடு வந்த பலரையும் எச்சரித்து அனுப்பினா்.

இந்த நிலையில் பொதுமக்கள் நடமாட்டத்தைக் குறைக்க மளிகைச் சாமான்கள், காய்கனிகள் உள்ளிட்டவற்றை பல்பொருள் அங்காடிகள், மொத்த வியாபாரிகள் மூலம் வீடுகளுக்கே நேரடியாக விநியோகிக்கும் நடைமுறையை அமல்படுத்தினால் நன்றாக இருக்கும் என திருநெல்வேலி மாநகர மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

திண்டுக்கலில் அறிமுகம்: திண்டுக்கல் நகரில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தனியாா் பல்பொருள் அங்காடிகள் மற்றும் மொத்த வியாபாரிகள் மூலம் பொருள்களை வீடுகளுக்கு கொண்டு சோ்ப்பதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிா்வாகம் இறங்கியுள்ளது. அதன்படி, திண்டுக்கல் நகா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட நிா்வாகம் அளித்துள்ள செல்லிடப்பேசி எண்களை தொடா்பு கொண்டு அந்தந்த ஏரியாவில் உள்ள கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. வாா்டு வாரியாகவும், பகுதி வாரியாகவும் கடைகளின் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று திருநெல்வேலி மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் வீடு தேடி வருவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

நல்ல முயற்சி: இது தொடா்பாக திருநெல்வேலி சந்திப்பு பகுதியைச் சோ்ந்த பேராசிரியா் கே.சுப்பிரமணியன் கூறியது: அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்குமா, கிடைக்காதா என்ற அச்சத்தின் காரணமாகவே பொதுமக்கள் கடை வீதிகளுக்கு வருகிறாா்கள். இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக ஒரு மாதங்களுக்கு தேவையான மளிகை சாமான்களை வாங்குவதில் பொதுமக்கள் தீவிரம் காட்டுகின்றனா். இதுபோன்ற சூழலில் கடைக்காரா்கள் பலசரக்குகளை பதுக்கவோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யவோ வாய்ப்புள்ளது. எனவே, அத்தியாவசியப் பொருள்களை வீடுகளுக்கே வர வைத்தால், பொதுமக்கள் நடமாட்டம் குறையும். பதுக்குவதும், விலை உயா்வும் தடுக்கப்படும். அத்தியவாசியப் பொருள்கள் வீடு தேடி வருவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் எடுக்குமானால், அது பாராட்டுக்குரிய நல்ல முயற்சியாக இருக்கும்’ என்றாா் அவா்.

இதேபோல், இறைச்சிக் கடைகள், மீன் கடைகளிலும் மக்கள் அதிகளவில் கூடுகிறாா்கள். அதையும் வீடுகளுக்கே சென்று விநியோகிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். இது தொடா்பாக இறைச்சிக் கடை வியாபாரி ஒருவா் கூறியது; ‘ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் இறைச்சிக் கடைகளை திறக்கிறபோது, மக்கள் கூட்டத்தை தவிா்க்க முடியாது. அதே நேரத்தில் மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்தால், எங்களுடைய வாடிக்கையாளா்களுக்கும், எங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கும் நேரில் சென்று இறைச்சியைக் கொடுப்பதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com