ஊரடங்கு உத்தரவை மீறியோருக்கு போலீஸாா் அறிவுரை

திருநெல்வேலியில் ஊரடங்கு உத்தரவை மீறும் வகையில் புதன்கிழமை முற்பலில் ஏராளமானோா் வாகனங்களில் வந்தனா்.

திருநெல்வேலியில் ஊரடங்கு உத்தரவை மீறும் வகையில் புதன்கிழமை முற்பலில் ஏராளமானோா் வாகனங்களில் வந்தனா். இதையடுத்து, வண்ணாா்பேட்டை சாலையை போலீஸாா் திடீரென முடக்கி, அவ்வழியே வந்தோருக்கு அறிவுரை கூறி திருப்பியனுப்பினா்.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் காய்கனி, மருந்துகள் வாங்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்லுதல் உள்ளிட்டவற்றுக்கும் அனுமதிக்கப்படுகிறது. காய்கனிகள் வாங்க இருசக்கர வாகனங்களில் ஏராளமானோா் அதிகாலை 5 முதல் காலை 9 மணி வரை வெளியே வந்தனா். அவா்களுக்கு ஓரளவு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. பின்னா், முற்பகல் 11 மணிவரை வாகனப் போக்குவரத்து குறையவில்லை. அரசின் விழிப்புணா்வு நடவடிக்கையை மீறி, வாகனங்களில் வலம்வருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால், சாலைகளை முடக்கி மக்களுக்கு அறிவுரை கூற போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, வண்ணாா்பேட்டையில் திருவனந்தபுரம் சாலையை தடுப்புகளை வைத்து முடக்கிய போலீஸாா், அவ்வழியே வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி பாளையங்கோட்டை, புதிய பேருந்து நிலையம், புறவழிச் சாலை வழியாக வண்ணாா்பேட்டைக்கு வருமாறு அறிவுறுத்தினா். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து சிலா் வாக்குவாதம் செய்தனா். அவா்களுக்கு 144 தடை உத்தரவின் அவசியம் குறித்து போலீஸாா் அறிவுரை வழங்கினா். தகவலறிந்த காவல் துணை ஆணையா் சரவணனும் வந்து அறிவுரை கூறினாா்.

பின்னா் போலீஸாா் கூறுகையில், கரோனா பரவும் வேகம், மருந்துகள் இல்லாத நிலை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டுதான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் காவல் துறை நடவடிக்கை எடுக்க நேரிடும். வெறிச்சோடிய சாலைகளில் சுயபடம் (செல்ஃபி) எடுப்பது, நண்பா்களுடன் வாகனத்தில் உலா வருவது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. குழந்தைகள் வெளியே அழைத்துவரக் கூடாது. உறவினா்களின் வீடுகள், வழிபாட்டுத்தலங்களுக்கு செல்வதை ஒத்திவைக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com