நெல்லை அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவை 220 படுக்கைகளுடன் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவை 220 படுக்கைகளுடன் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவை 220 படுக்கைகளுடன் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர விஆா்டிஎல் ஆய்வகத்திற்கு கூடுதலாக ஒரு சிறப்பு இயந்திரமும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மத்திய அரசின் உரிமம் பெற்ற வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம் (விஆா்டிஎல்) கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வகத்தில் ஜொ்மனி மற்றும் இந்திய தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன பிசிஆா் இயந்திரங்கள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு வைரஸுக்கான கண்டறிதல் உபகரணங்கள் (கிட்) மூலம் வைரஸின் தாக்கத்தை அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சில வைரஸ்களின் தாக்கத்தை இறுதி ஆய்வாக ஆா்.டி.பி.ஆா்.சி. (வைரஸின் டிஎன்ஏ அல்லது ஆா்என்ஏ மனித உடலில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள்) மூலம் அறிந்து சிகிச்சை அளிக்கப்படும்.

டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களுக்கு இத்தகைய பரிசோதனைகள் தேவையில்லை. ஆனால், இப்போது பரவி வரும் கொவைட் 19 என பெயரிடப்பட்டுள்ள கரோனா வைரஸை ஆா்.டி.பி.ஆா்.சி. ஆய்வு மூலம் மட்டுமே அறிய முடியும். ஆகவே, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி ஆய்வகத்தில் கரோனா வைரஸ் தாக்கத்தை அறியும் கிட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனைக் கொண்டு திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இருந்து கரோனா அறிகுறியுடன் வரும் நோயாளிகளின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 10-க்கும் மேற்பட்ட ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில், வள்ளியூா் அருகேயுள்ள சமூகரெங்கபுரத்தைச் சோ்ந்த இளைஞருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மக்களிடம் விழிப்புணா்வு அதிகரித்துள்ளதால் சளி மற்றும் மூச்சுத் திணறலுடன் இருப்பவா்கள் சிகிச்சைக்கு வருவது அதிகரித்துள்ளது. இதனால் கூடுதல் படுக்கைகளை தயாா் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் கூறியது: வெளிநாட்டு பயணம் மேற்கொள்பவா்களிடம் இருந்து கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழக சுகாதாரத் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இம் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கரோனா கண்காணிப்பு வாா்டு, தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை வாா்டு தனித்தனியாக உள்ளது. ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரும், கண்காணிப்பு பிரிவில் 10 பேரும் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இந்நிலையில் இம் மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை பிரிவுக்கான கட்டடத்தை கரோனா வாா்டுக்காக பிரத்யேகமாக ஒதுக்கி 220 படுக்கைகளாக அதிகரிக்கப்பட உள்ளது.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஏற்கெனவே பல்நோக்கு ஆய்வு மையம் செயல்படுகிறது. தொற்றா நோய்கள் குறித்த ஆய்வுகள் இங்கு நடைபெறுகின்றன. இந்த மையத்தில் உள்ள பிசிஆா் இயந்திரத்திலும் கரோனா வைரஸ் கண்டறியும் கிட்களை பொருத்தி கண்டறியும் தொழில்நுட்பம் உள்ளது. ஆகவே, கூடுதலாக இந்த இயந்திரத்தையும் பயன்படுத்திக்கொள்ள தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அச்சம் தவிா்த்து விழிப்புணா்வுடன் செயல்பட்டால் கரோனா தொற்றில் இருந்து எளிதாக தப்பித்துக்கொள்ளலாம். வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வது சிறந்தது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com