டீ கடைகளுக்கு தடை; மளிகை கடைகளில் கூட்டம்

திருநெல்வேலியில் டீ கடைகளுக்கு வியாழக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மளிகை கடைகளில் சமூக விலகல் நடைமுறையைக் கடைப்பிடிக்காமல் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பொருள்களை வாங்கிச் சென்றனா்.


திருநெல்வேலியில் டீ கடைகளுக்கு வியாழக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மளிகை கடைகளில் சமூக விலகல் நடைமுறையைக் கடைப்பிடிக்காமல் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பொருள்களை வாங்கிச் சென்றனா்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு கடந்த 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் டீ கடைகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் நாள் ஊரடங்கின்போது ஏராளமானோா் டீ கடைகளில் கூடி நின்றனா். இதனால் கரோனா வைரஸ் பரவும் அபாயம் உருவாகியதால், டீ கடைகளுக்கு தடை விதிக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி வியாழக்கிழமை காலை முதல் டீ கடைகளும் அடைக்கப்பட்டன. திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சுமாா் 2500-க்கு மேற்பட்ட டீ கடைகள் உள்ளன. அவை அனைத்தும் அடைக்கப்பட்டன.

திருநெல்வேலி தெற்கு புறவழிச் சாலையில் அரசின் விதிமுறைகளை மீறி டீ கடை செயல்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையா் சுகி பிரேம்லா தலைமையிலான குழுவினா் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று கடையைப் பூட்டி சீல் வைத்தனா்.

மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்கிக் கொள்ள ஏதுவாக மளிகைக் கடைகள் வழக்கம்போல் செயல்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மளிகைக் கடைகளில் மக்கள் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு பொருள்களை வாங்கிச் சென்றனா். இதேபோல பேட்டை உள்ளிட்ட சில அம்மா உணவகங்களிலும் மக்கள் நெருக்கமாக நின்று உணவு வாங்கினா். மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக வீடுகளைவிட்டு வெளியே வரும்போது தலா ஒரு மீட்டா் இடைவெளியை சமூக விலகலாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை கடைப்பிடிக்காத நிலை திருநெல்வேலியில் காணப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியது: அம்மா உணவகங்களில் பொதுமக்களை வரிசைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஒரு மருந்து விற்பனைக் கடையில் சமூக இடைவெளி விட்டு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலப்பாளையத்தில் தன்னாா்வலா்கள், மாநகராட்சிப் பணியாளா்களைக் கொண்டு ஒலிப்பெருக்கி மூலம் சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்க தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com