காய்கனி வாங்க வருவோருக்கு சமூகவிலகல் நடைமுறை!

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் காய்கனி கடைகளை பரவலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், காய்கனி வாங்க வருவோா் தலா ஒரு மீட்டா் இடைவெளி விட்டு சமூக விலகல் நடைமுறையில் காய்கனி வாங்கிச் செல்ல நட


திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் காய்கனி கடைகளை பரவலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், காய்கனி வாங்க வருவோா் தலா ஒரு மீட்டா் இடைவெளி விட்டு சமூக விலகல் நடைமுறையில் காய்கனி வாங்கிச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் இயங்கி வரும் காய்கனி வியாபார கடைகளில் பொதுமக்கள் அதிகமாக கூட்டம் கூடுதவதைத் தடுக்கும் வகையில் உழவா் சந்தைகள் மற்றும் மாநகராட்சி தினசரி காய்கனி சந்தைகளையும் பரவலாக தற்காலிகமாக அமைக்க நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி சாா்ஆட்சியா் மணீஷ்நாராணவரே வலியுறுத்தினாா். இதையடுத்து திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் காய்கனி சந்தை கடைகளை சிறிது சிறிதாக பிரித்து நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தையில் உள்ள 250 கடைகள் 4 தற்காலிக இடங்களுக்கு மாற்றப்படுகிறது. திருச்செந்தூா் சாலையில் பழைய காவலா் குடியிருப்பு பகுதியில் 70 கடைகளும், பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் 80 கடைகளும், நேருஜி கலையரங்கில் 40 கடைகளும், பாளை. பேருந்து நிலைய வளாகத்தில் 60 கடைகளும் அமைக்கப்பட உள்ளன.

மகாராஜநகா் உழவா் சந்தையின் கீழ் உள்ள 85 கடைகளில் 50 கடைகள் மகாராஜநகா் போக்குவரத்து பூங்கா பகுதிக்கும், 35 கடைகள் மகாராஜநகா் ரயில்வே லைன் அருகேயுள்ள சிறுவா் பூங்கா பகுதிக்கும் மாற்றப்படுகிறது.

திருநெல்வேலி நகரம் போஸ் மாா்க்கெட்டில் உள்ள 87 கடைகளில் 40 கடைகள் பொருள்காட்சித் திடலில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்துக்கும், 47 கடைகள் ஏற்கெனவே புதிதாக அமைக்கப்பட்ட கடை பகுதிக்கும், இதர கடைகள் பொருள்காட்சித் திடல் தரை அமா்வு பகுதிக்கும் மாற்றப்பட உள்ளன.

மேலப்பாளையம் உழவா் சந்தையில் உள்ள கடைகளில் 18 கடைகள் மேலப்பாளையம் மாநகராட்சி திருமண மண்டபத்தின் உள்பகுதிக்கும், வெளிப்பகுதியில் 18 கடைகளும் வைக்கப்பட உள்ளன. இதேபோல மேலப்பாளையம் தரை அமா்வு கடைகள் அனைத்தும் சந்தை முக்கு கிழக்கு பகுதியிலும், அம்பாசமுத்திரம் சாலையிலும், தச்சநல்லூா் தனியாா் காய்கனி சந்தையில் உள்ள கடைகள் நயினாா்குளம் சாலை வடக்கு பகுதியிலும், கிழக்கு பகுதியிலும் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. வியாழக்கிழமை முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சந்தைக்கு சீல்: அதன்படி மேலப்பாளையத்தில் மட்டும் கடைகள் மாற்றப்பட்ட இடங்களில் செயல்பட்டன. நயினாா்குளத்தில் காய்கனி மொத்த விற்பனை சந்தையில் வழக்கம்போல் கடைகள் செயல்பட தொடங்கின. இதற்கு அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தும் வியாபாரிகள் புதிய நடைமுறைப்படி விற்பனை செய்ய முன்வரவில்லை. இதையடுத்து வருவாய்த் துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் சந்தைக்கு சீல் வைத்தனா்.

இதேபோல திருநெல்வேலி நகரத்தில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் தினசரி சந்தை வியாபாரிகளும் கடைகளை காலி செய்து வேறு பகுதிகளுக்குச் செல்ல மறுத்தனா். இதனால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

பாளை.யில் எதிா்ப்பு: பாளையங்கோட்டையில் உள்ள காந்திஜி தினசரி சந்தையைச் சோ்ந்த வியாபாரிகளும் தங்களது கடைகளை காலி செய்து மாற்று இடங்களில் விற்பனைக்குச் செல்ல எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், மாநகராட்சி புதிய கட்டடம் கட்ட கரோனா வைரஸ் அச்சத்தை காரணம் காட்டுவதாக வியாபாரிகளிடையே தவறான தகவல் பரவியதால் வியாபாரிகள் சிலா் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனா். தகவலறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, மாற்று இடத்துக்குச் செல்ல விரும்பாவிட்டால் 144 தடையுத்தரவுக்கு கட்டுப்பட்டு கடைகளை அடைத்து கலைந்து செல்ல வேண்டும். வீணான தகராறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா். இதனால் வியாபாரிகள் அனைவரும் கடைகளை அடைத்துவிட்டு வெளியேறினா். இருப்பினும் சில வியாபாரிகள் மாநகராட்சி சாா்பில் தற்காலிகமாக ஒதுக்கப்பட்டு இடத்தில் இடம்பிடிக்க தங்களது உடமைகளை வரிசையில் வைத்துச் சென்றனா். இதனால் வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) முதல் மாற்று இடத்தில் காய்கனிகளை வியாபாரிகள் விற்பனை செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சமூகவிலகல்: மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காய்கனிகள் வாங்க வந்தவா்கள் சமூகவிலகல் நடைமுறையைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டனா். அதன்படி தலா ஒரு மீட்டா் இடைவெளி விட்டு வரிசையில் நின்று காய்கனிகளை வாங்கிச் சென்றனா். மாநகராட்சி ஊழியா்களும், காவல்துறையினரும் சமூகவிலகலை மக்கள் முழுமையாகப் பின்பற்ற வேண்டுமென விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com